விஷ்ணுவிஷாலின் குடும்பக்கதை – திரையுலகம் வியப்பு
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணுவிஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஓகோ எந்தன் பேபி.
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் இப்படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 28 அன்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஷ்ணுவிஷால் பேசியதாவது…..,
விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத்தம்பி இல்லை.அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்பப்பின்னணியில் இருந்து வந்தவர்கள்.இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு.படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல்பாதி ஒருவரும்,இரண்டாம்பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி கொள்வார்கள். அப்படியான சினிமாபைத்தியம் அவர்கள். இருவரும் பத்தாம்வகுப்பு வரை படித்தார்கள்.பிறகு எனது பெரியப்பாவிற்கு படிப்பு வரவில்லை.அதனால் அவர் வேலைக்கு சென்று எனது அப்பாவை படிக்கவைத்து ஐபிஎஸ் ஆக்கினார்.அவருடைய பையன்தான் ருத்ரா. ருத்ராவுக்கு நான் செய்யவேண்டிய கடமை எப்படிப்பட்டது என்பது இந்தக்கதை மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் ஃபோர்ஸ் செய்தார்.இன்று இந்த மேடையில் நான் இருக்க காரணமே அவர்தான். அப்படி என்றால் ருத்ராவை எந்த அளவுக்கு அவர் சொல்லி வளர்த்திருப்பார் என்று பாருங்கள்.நிச்சயம் உங்கள் ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது.விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்றாலே வெற்றி படங்கள்தான்.அந்த வரிசையில் இந்தப்படமும் உங்களுக்கு வெற்றியாக அமையும்.விஷ்ணு விஷால் சொன்ன கதை எமோஷனலாக இருக்கிறது.இதையே ஒரு படமாக எடுக்கலாம். நான் என் குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் தான் சினிமாவுக்குள் வந்தேன்.அப்படி இருக்கும் பொழுது உங்கள் கதை எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் இருக்கிறது.எதாவது ஒரு பழைய ஹிட் பாடல் அந்தப்படத்தில் இடம் பெற்றிருந்தால் படம் சூப்பர் ஹிட் தான். ‘லியோ’ முதல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரை இதற்கு உதாரணம் சொல்லலாம்.நீங்கள் ஒரு பழைய ஹிட் பாடலையே டைட்டிலாக வைத்திருக்கிறீர்கள். நிச்சயம் படம் வெற்றி பெறும்!ருத்ரவாவுக்கு ஹீரோவுக்கான சார்ம் உள்ளது.நீங்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துகள்.தமிழ் சினிமாவில் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போதை தொடர்பான காட்சிகளை வைக்கக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது….,
ரொம்பவே ஸ்வீட்டான படம் இது.விஷ்ணு விஷாலுடைய தம்பி அவரை விடவே இன்னும் நன்றாகவே நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் ருத்ரா உதவி இயக்குநராக வேலை செய்தார்.இயக்கம் கற்றுக் கொண்டாரோ இல்லையோ சூப்பராக நடிக்கக் கற்றுக்கொண்டார்” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது..,
இளைஞர்களுக்கான படம் என்பதை அதன் முன்னோட்டம் பார்க்கும் போதே தெரிகிறது.அவ்வளவு இளமையாக இருக்கிறது.ருத்ராவுக்கு வாழ்த்துகள்! விஷ்ணுவிஷால் சொன்ன கதையும் நன்றாக இருந்தது. விரைவில் யாராவது படம் ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியதாவது…,
எனது கரியரை தொடங்கியதில் இருந்தே விஷ்ணு விஷாலின் அப்பா எனக்கு வழிகாட்டியவர்.அவர்களின் குடும்பத்தையும் அந்த எமோஷனையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது.,
ருத்ரா சிறப்பாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்த பெரிய பாதைக்கு இந்தப்படம் நல்ல தொடக்கம். விஷ்ணுவிஷால் அவருடைய கரியரை தாண்டி அதிகம் பேசி இருப்பது ருத்ராவைப் பற்றித்தான். வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…,
விஷ்ணுவிஷால் தனது தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று என்னை முன்பு சந்தித்தபோது சொல்லியிருந்தார்.இப்பொழுது மேடையில் அவரது கதையைக் கேட்ட பின்பு அந்த வார்த்தையின் அர்த்தமும் கனமும் புரிகிறது.அவரது வாழ்க்கையின் நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது எங்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களின் ரிதமும் நண்பர்களை போலவே இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் கார்த்தி பேசியதாவது…,
விஷ்ணுவிஷால் மேடையில் சொன்ன கதையைக் கேட்ட போது ‘வானத்தைப் போல’ படம் போல இருந்தது. அந்தப்படத்தைப் போல உண்மையில் இருப்பார்களா என்று நினைத்தேன்.ஆனால்,இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்!அப்பா நம்மை கையில் தூக்கி வைத்திருந்தால் அண்ணா தோளில் தூக்கி வைத்திருப்பார்.அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி!அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கும் வந்தேன்.நான் புதிதாக திரைத்துறையில் நுழையும் பொழுது அத்தனை பேர் என்னை வாழ்த்தினார்கள், அன்பு கொடுத்தார்கள்.அந்த அன்பை திரும்பக் கொடுக்கவே இங்கு வந்தேன்.இரசிகர்கள் தியேட்டரில் ஜாலியாக இருக்கவே வருகிறார்கள்.வெற்றிமாறன் சார் தான் சீரியஸான படங்கள் எடுக்கும் டிரெண்டை உருவாக்கி விட்டார்.அதேபோல இயக்குநர் கிருஷ்ணாவும் நல்ல நடிகர்.இயக்குநராக அவருக்கும் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது…,
ருத்ராவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்! எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என வருத்தமாக உள்ளது.மிதிலாவுடன் நான் தெலுங்கில் ‘ஓ மை கடவுளே!’செய்திருக்கிறேன்.அவருக்கு தெலுங்கு தெரியாது.ஆனால் ஒரு சிங்கிள் டயலாக் கூட மிஸ் செய்யாமல் புரொபஷனலாக நடித்தார்.தமிழில் அவர் சரியான குழுவினருடன் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது…
டிரெய்லர் பார்க்கும் பொழுதே ருத்ரா மற்றும் படக்குழுவினர் எந்த அளவுக்கு சிறப்பாக வேலை பார்த்திருக்கின்றனர் என்று தெரிகிறது.நான் ஒரு கல்வியாளர்.இருந்தாலும் படங்கள் நிறைய தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.அது ஒரு தனிக்கதை!இதுவரை என் கதை மட்டும் தான் பெரிது என நினைத்திருந்தேன். ஆனால் விஷ்ணுவிஷால் சொன்ன அவர் குடும்பக் கதையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. விஷ்ணுவிஷால் நல்ல அண்ணன்,நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல தயாரிப்பாளர்.அவருடைய விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து நாங்கள் மூன்று படங்கள் தயாரிக்க இருக்கிறோம். வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா பேசியதாவது…
படம் வெற்றி பெற வாழ்த்துகள்! இயக்குநர் கிருஷ்ணா என்னுடைய காலேஜ் ஜூனியர்.எந்த ஒரு மொமெண்ட் கொடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக மாற்றி விடுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்
இயக்குநர் செல்ல அய்யாவு பேசியதாவது…..
இயக்குநர் கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர்.அவரை தமிழ் சினிமா விடாதே என்று யோசித்த போதுதான் விளம்பரங்கள்,இயக்கம் என கலக்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.ருத்ராவை வைத்து நான்தான் முதல்படம் செய்வதாக இருந்தது.ஆனால் கிருஷ்ணா முந்திக்கொண்டார்.ருத்ரா ஹீரோவாக வேண்டும் என கடுமையாக தயார் செய்து கொண்ட ஒரு நபர். அவருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் விஜய்ஆதிராஜ் பேசியதாவது…,
விஷ்ணுவிஷாலுக்கு சிறந்த தம்பி கிடைத்துள்ளார். அந்த அளவிற்கு சிறப்பாக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் வாழ்த்துகள்! படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ்கல்யாண் பேசியதாவது..,
பெரிய சிரமம் இல்லாமல் எல்லோரும் குடும்பமாக வேலை பார்த்தோம். நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் கண்ணா பேசியதாவது…..
இது என்னுடைய முதல்படம்.என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி.படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின் பேசியதாவது….
எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் கிருஷ்ணாவை நடிகராகத் தெரியும்.அவர்தான் இயக்கம் என்றதும் ஆச்சரியப்பட்டேன்.ருத்ரா சிறப்பாக நடித்திருக்கிறார்.மியூசிக்கலாக படத்தில் நிறைய ஸ்கோப் இருந்தது.கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
நடிகை மிதிலா பேசியதாவது….,
சென்னைக்கு வந்துள்ளது மீண்டும் என்னுடைய வீட்டிற்கு வந்தது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்துள்ளது. என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர்,தயாரிப்பாளர் ருத்ரா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.படத்தில் நானும் பாடியிருக்கிறேன்.கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பேசியதாவது….
நடிகனாக ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது இயக்குநர் ஆனது வரை என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.நான் நடிகனாக இருந்தபொழுது நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால், இயக்குநரான பின்பு என்னுடைய படம் தான் பேசவேண்டும்.நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஜூலை 11 அன்று திரையரங்குகளில் பாருங்கள்.பொதுவாக,இயக்குநர்தான் நடிகருக்கு கதை சொல்வார்கள்.ஆனால்,எனக்கு இங்கு ருத்ராதான் கதை சொன்னார்.ஒரு நடிகராக தன்னை சிறப்பாக ருத்ரா தயார் செய்து இருக்கிறார்.என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஷ்ணுவிஷால் இந்தப்படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார்.மிதிலாவும் தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.
நடிகர் ருத்ரா பேசியதாவது…..
இந்தத்தருணத்திற்காக தான் பல நாட்கள் காத்திருந்தேன்.கனவு நனவாகிவிட்டது.அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.சினிமாதான் என்னுடைய முதல்நண்பன்.உதவிஇயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்பது கார்த்தி சாரை பார்த்து தான் ஐடியா வந்தது.இந்த மேடை எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்குககாரணம், இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள்,தொழில்நுட்பக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.ஜென்மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும்.என்னுடைய குடும்பம்,நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
நடிகர் விஷ்ணுவிஷால் பேசியதாவது…,
எங்களுடைய குடும்பக்கதையைப் புரிந்துகொண்டு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி.இந்த விழாவின் நாயகன் ஜென்மார்ட்டின் தான்.புதுமுகங்கள் அறிமுகமாகும் ஒரு படத்திற்கு பாடல்களும் இசையும் மிகவும் முக்கியம்.நல்ல குடும்பக்கதைகளை இரசிகர்கள் விரும்பிப்பார்க்கிறார்கள் என்பதற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘டிராகன்’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இயக்குநர் கிருஷ்ணா அற்புதமாக இயக்கியுள்ளார். அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.











