ஆர்.ஜே.விஜய் அஞ்சலிநாயர் நடிக்கும் ஒய்ஃப் – முதல்பார்வை வெளியானது
ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் ஆர்ஜே.விஜய் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன், மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சிவசங்கர் இப்படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் டிசம்பர் 12,2023 அன்று தொடங்கியது
இப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை நேற்று வெளியாகியுள்ளது.படத்துக்கு ஒய்ஃப் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறியதாவது…
கணவன் – மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம்.அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம்.ஒய்ஃப் என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விசயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்ததாது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.










