செய்திக் குறிப்புகள்

ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் பதில்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,ஆந்திர திரையுலகைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அவர் குற்றம் சாடியவர்களில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர்.

ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்துள்ளார். அதில்,

ஸ்ரீ ரெட்டி விவகாரம் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விவகாரமே அல்ல. பத்திரிகையாளர்கள் பலர் என்னிடம் இது பற்றி விளக்கம் கேட்டதால் இப்போது விளக்கமளிக்க விரும்புகிறேன்.

7 வருடங்களுக்கு முன்பு நான் ‘ரிபெல்’ தெலுங்குப் படத்தை இயக்கியிருந்தேன். அந்த சமயத்தில் என்னை சந்தித்ததாக ஸ்ரீ ரெட்டி சொல்கிறார். ஆனால், இத்தனை வருடங்களாக இது பற்றி அவர் ஏன் புகார் அளிக்கவில்லை.

என் ஹோட்டலுக்கு வந்ததாகவும், நான் தவறாக நடந்து கொண்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். என்னுடைய அறையில் சாமி படங்களும், ருத்ராட்ச மாலையையும் பார்த்தாகச் சொல்கிறார். ஹோட்டல் அறைகளில் நான் ருத்ராட்ச மாலை வைத்திருந்ததாக அவர் சொன்னது முட்டாள்தனமானது.

ஸ்ரீ ரெட்டிக்கு நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன். நான் எந்தத் தவறையும் செய்யவில்லை, கடவுளுக்குத் தெரியும், என்னைப் பற்றி எனக்குத் தெரியும். இவ்வளவு நடந்தும் அவர் மீது எனக்குக் கோபம் இல்லை.

அவருடைய அனைத்து பேட்டிகளையும் பார்த்தேன், அவர் மீது நான் பரிதாபப்பட்டேன்.

உங்களுக்கு என்ன பிரச்சினை ஸ்ரீரெட்டி . உங்களுக்கு அனைவரும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், உங்களுக்கு வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினை.

நீங்கள் நல்ல நடிகை என்று சொல்கிறீர்கள். நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை உங்களுடன் சேர்ந்து நடத்துகிறேன். உங்களுக்கு ஒரு கதாபாத்திரத்தையும், ஒரு காட்சியையும், நடன அசைவையும் தருகிறேன். நான் ஆடுவது போல கடினமாகத் தர மாட்டேன். சிம்பிளான நடன அசைவுகள், வசனங்களைத் தருகிறேன். ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் அவை. உங்களுக்குத் திறமையிருந்தால், என் முன்னோ, அல்லது பத்திரிகையாளர்கள் முன்போ நடித்துக் காட்டுங்கள்.

உண்மையிலேயே உங்களுக்குத் திறமை இருந்தால், ஒரு இயக்குனராக, உங்களுக்கு என்னுடைய அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும், உடனே அட்வான்சையும் தருகிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் உங்களை நேரடியாக சந்திக்க பயப்படவில்லை.

என் படத்தில் நீங்கள் நடித்தால், உங்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கலாம். அனைவர் முன்பும் நடிக்க தயக்கமாக இருந்தால் உங்கள் வக்கீலுடன், உங்கள் நலம் விரும்பிகளுடன் எனது மேனேஜரைப் பார்த்து, உங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வேன்.

இந்த பதில் கூட நான் பயந்து போய் தரவில்லை, நான் பெண்களை பெரிதும் மதிக்கிறேன், அதனால்தான் எனது அம்மாவிற்குக் கோயில் கட்டியுள்ளேன். அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

நல்ல விஷயத்தைப் பேசுவோம், நல்ல விஷயத்தை செய்வோம், உங்கள் நல்ல வாழ்க்கைக்கு பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ராகவலா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

Related Posts