தனுஷின் கனவுப் படத்துக்கு வந்த சோதனை
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் வடசென்னை.
இந்தப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியிடப்போவதாக ஒன்றரை மாதம் முன்பே அறிவித்தார்கள்.
ஜூலை 27 இரவு பனிரெண்டு மணிக்கே டீசரை வெளியிட்டு தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தடை பட்டது.
இரவு விருந்து மட்டும் யாருக்கும் தெரியாது என்று நினைத்து நடத்தி முடித்துவிட்டார்கள்.
அதேசமயம், ஜூலை 27 இரவு பனிரெண்டு மணிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்த டீசரை ஜூலை 28 மாலை ஆறு மணிக்கு வெளியிட்டார்கள்.
வழக்கமாக தனுஷ் படங்களின் டீசர் வந்தால், திரையுலகில் அதுபற்றிப் பேச்சு பெரிதாக இருக்கும். இது தனுஷின் கனவுப்படம் என்று சொல்லப்பட்ட படம்.
தனுஷின் மற்ற படங்களை விடக் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டிய இதன் டீசர் திரையுலகினராலும், ஊடகங்களாலும் வெகுமக்களாலும் கவனிக்கப்படாமலே இருக்கிறது.
வருங்கால முதல்வர் தனுஷ் என்றெல்லாம் சுவரொட்டி அடித்ததோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தி, தனுஷ் பிறந்தநாளைப் பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர்.
கலைஞர் கருணாநிதி தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், அதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. .
யாரும் எதிர்பாராமல் வந்த இந்த சோத்னையால் தீவிர தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.











