September 23, 2026
சினிமா செய்திகள்

இளையராஜா படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்?

திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, சென்னையில் மார்ச் 20,2024 அன்று நடைபெற்றது.

அந்நிகழ்வில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன்,கங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் இப்படத்துக்கு இசையமைப்பது யார்? என்கிற அறிவிப்பு வெளியாகவில்லை.ஆனால், இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,இந்தப் படத்தில் இளையராஜா சார் இசையைக் கேட்க நான் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.இதன்மூலம் இப்படத்துக்கு அவரே இசையமைக்கவிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால், இப்படத்துக்கு இளையராஜா இல்லாமல் வேறொரு இசையமைப்பாளரைப் பணிபுரிய வைப்பதுதான் சரியாக இருக்கும் என்கிற கருத்து பலருக்கு இருந்திருக்கிறது. இளையராஜாவும் என்னுடைய படத்துக்கு நானே இசையமைத்தால் சரியாக இருக்காது என்கிற கருத்துடன் இருந்தார் என்கிறார்கள்.

இதனால் இளையராஜா படத்துக்கு யாரை இசையமைக்க வைக்கலாம்? என்கிற விவாதம் நடந்து இறுதியாக ஏ.ஆர்.ரகுமானைக் கேட்கலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டதாம்.

அதன்பின், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் முக்கியமான ஒருவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இளையராஜா படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதைக்கேட்டவுடன் ஏ.ஆர்.ரகுமான்,அவர் படத்துக்கு நானா?இதைக் கேட்டவுடன் என்னால் சரியாகச் செய்துவிட முடியுமா? என்கிற பயம்தான் வருகிறது.எனவே, மறுபரிசீலனை செய்யுங்கள் என்று சொன்னதாகத் தெரிகிறது.

ஆனாலும் அவரை இசையமைக்க வைக்கவேண்டும் என்று படக்குழுவினர் விரும்புகிறார்களாம்.அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இளையராஜா படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான் என்கிற அறிவிப்பு வெளியாகும்.

நடந்தால் நல்லதுதான்.

Related Posts