சினிமா செய்திகள்

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் அதிரடி மாற்றம்

விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 மாலை ஆறு மணிக்கு வெளியானது.

விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப் படக்குழு வெளியிட்டது.அதன்படி, அந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக அந்தப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகப் பேச்சு அடிபட்டது. விஷாலுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே அப்படம் கைவிடப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

இப்போது, அப்படம் தொடர்கிறது என்றும் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை விஷாலே ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

இப்படத்துக்காக விஷாலுக்கு பெரிய முன் தொகை கொடுத்திருந்தாராம் வினோத். அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக விஷால் உறுதியளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts