சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் குபேரா – தமிழ்நாடு விலை விவரம்

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் குபேரா.இதில் ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா தரணி,ஆர்.கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘குபேரா’, இந்தியா முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை (மே 16,2025) 4.30 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்
போட்டியில் வென்று இதைக் கைப்பற்றியுள்ளது.

இதற்காக அந்நிறுவனம் கொடுத்துள்ள தொகை சுமார் பதினெட்டு கோடி என்று சொல்லப்படுகிறது.அதோடு கூடுதலாக சுமார் ஒரு கோடி ரூபாய் க்யூப் கட்டணம் செலுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுகிறது.ஆக மொத்தம் பத்தொன்பது கோடி என்று சொல்கிறார்கள்.

அதேநேரம், தமிழில் இந்தப்படத்துக்கு இவ்வளவு விலை என்பது அதிகம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.அதேநேரம்,இப்படத்தில் நடித்திருக்கும் தனுஷ் மட்டுமின்றி, நாகார்ஜுனா,ராஷ்மிகா ஆகியோரும் தமிழ் திரைப்பட இரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அதுதவிர படமும் மிக நன்றாக வந்திருக்கிறது என்பதால்,நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையின் காரணமாகவே இவ்வளவு விலை கொடுத்திருக்கிறார்களாம்.

இன்னொரு பக்கம்,இப்படத்தில் நடித்திருப்போர் தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றவர்கள் என்றாலும் இப்படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா,தெலுங்கு கலாச்சாரத்தை மையப்படுத்தி படங்களை எடுக்கக் கூடியவர்.இந்தப்படத்தையும் அதே வகையில் எடுத்திருந்தால் அது தமிழ் இரசிகர்களுக்கு அந்நியமாக இருக்கும்.அதனால் படம் பிடிக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இவ்வளவு தொகை வசூலாகுமா? என்பது ஐயம்தான் என்று திரைப்பட வியாபார வட்டங்களில் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதென அறிய இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்க வேண்டும்.

Related Posts