சினிமா செய்திகள்

வளரும் நடிகைக்கு விஷால் கொடுத்த பெரிய வாய்ப்பு

புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது.

இதற்கடுத்து,ஏற்கெனவே திட்டமிட்டபடி அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால்.

இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் அரங்கம் அமைக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகின்றன.

அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கும் படப்பிடிப்பு நவம்பர் 3 ஆம் தேதி வரை அங்கே நடக்கும் என்கிறார்கள்.

அதன்பின் தீபாவளிக்குப் பின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அது மலேசியாவில் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க பல நடிகைகளைப் பார்த்திருக்கிறார்கள். இறுதியாக மிருணாளினியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

டிக்டாக் பிரபலமான இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிக்கும் கோப்ரா படத்திலும் சசிகுமாரின் எம்ஜிஆர்மகன் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரை நடிக்க வைக்கலாம் என்று சொன்னவுடன் வளரும் நடிகைக்கு நம் படம் பெரிய திறவுகோலாக இருக்கட்டும் என்று சொல்லி அவரை நாயகியாக்கச் சம்மதம் தெரிவித்தாராம் விஷால்.

முதன்முறையாக ஒரு பெரிய படத்தில் ஒரு பெரிய கதாநாயகனுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் மிருணாளினி.

Related Posts