சினிமா செய்திகள்

சூர்யா படச்சிக்கல் – தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சமரசம்

சூர்யா தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இச்சிக்கலில் ஒரு சமரசம் ஏற்பட்டிருக்கிறது.

இச்சிக்கலில் சூர்யாவுக்கு ஆதரவாகப் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள குரல்பதிவில்….

திருப்பூர் சுப்பிரமணியம் அண்ணனுக்கு, ஒரு நலம்விரும்பியா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்கிறேன், நீங்க தொடர்ந்து உங்கள் கருத்தை பதிவிட்டுக் கொண்டே இருக்கறதால தேவையில்லாம உங்களை பெரிய விரோதப் போக்கில் பார்க்கிற சூழல் ஏற்பட்டிருக்கு.உங்களை எல்லோரும் வசை பாட வேணாம்.

அந்த அக்கறையில சொல்றேன் இந்தச் சிக்கலை அப்படியே விட்டுடுங்க,கொரோனா சூழ்நிலை சரியான பின்பு, இதை எப்படி சரி செய்யணுமோ அப்படி சரி செஞ்சுக்கலாம்.

இப்ப நீங்க பேசறதால் உங்களுக்குக் கெட்ட பெயர் என்பதைவிட உங்களை தப்பான ஆள் என்கிற சித்தரிப்பும் நடக்குது,நீங்க நெறைய விட்டுக் கொடுத்திருக்கீங்க, செஞ்சிருக்கிங்க என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

அதனால் இந்தப்பதிவை உங்கள் நலனுக்காக மட்டும் போடுகிறேன் வேறு எந்த எண்ணமும் இல்லை. நன்றி

இவ்வாறு தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்து திருப்பூர் சுப்பிரமணியம் வெளீயிட்டுள்ள குரல்பதிவில்…..

என் மேல் இவ்வளவு அன்பு வைத்து நீங்கள் பேசியது எனக்கு உண்மையிலேயே சந்தோசம். ஒரு சங்கத்தின் தலைவராக இருப்பதால் என்னிடம் பல உறுப்பினர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் சில பதிவுகள் போடவேண்டியிருக்கு.கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டும் பேச வேண்டியிருக்கு. அதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பும் பேசினால்தான் சினிமா நல்லாயிருக்கும்.இந்த இண்டஸ்ட்ரி நல்லாயிருக்கணும்னா முதல்ல தயாரிப்பாளர் நல்லா இருக்கணும். தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தா மாத்திரம்தான் இந்தத் தொழில் சிறப்பா நடக்கும். தயாரிப்பாளர்கள் நன்மைக்காக திரையரங்கு உரிமையாளர்கள் எவ்வித ஆதரவும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இதில் மாறுபட்ட கருத்தே கிடையாது.

ஓடிடி விசயத்தைப் பேசியதற்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்படுகிற ஒரு தயாரிப்பாளர் இப்படிச்செய்திருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டோம்.இவர்கள் எல்லா வகையிலும் வளமாக இருப்பவர்கள். இவர்கள் இப்படிச் செய்ததுதான் வருத்தம்.அந்த ஆதங்கத்தில்தான் பேசினேன்.

மறுபடியும் சொல்கிறேன் இந்தத் துறையில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் மற்ற எல்லாமே சரியாக இருக்கும்.கடந்த பல ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் இலாபத்திலேயே இல்லை. எனவே இதைச் சரி செய்ய எல்லோரும் அமர்ந்து பேசிச் சரி செய்வோம். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்தப் பதிவுகளால் தற்காலிகமாக இச்சிக்கல் அமைதியாகியிருக்கிறது. இது நிரந்தரமாவது அனைவருக்கும் நல்லது.

Related Posts