சம்பளத்தைக் குறைத்தார் ரஜினி – திரையுலகம் வியப்பு
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு வந்தது. இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
அப்படத்தை இயக்கப்போவது யார்? என்கிற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடுவே பீஸ்ட் படத்தை இயக்கும் நெல்சன் திலிப்குமார் பெயரும் அடிபட்டது.
இயக்குநர் யாராக இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி என்பதோடு இதுவரை நடக்காத அதிசயமொன்று நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆம், அண்ணாத்த படத்துக்கு நூறு கோடி சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த், அடுத்த படத்தின் சம்பளத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
ரஜினிகாந்தின் சம்பளம் எழுபது கோடி என்று சன் பிக்சர்ஸ் நிர்ணயம் செய்திருப்பதாகவும் அதை ரஜினிகாந்தும் ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
படம் ஓடுகிறதோ இல்லையோ படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் கதாநாயகர்கள் மத்தியில் நூறு கோடி ரூபாய் வாங்கிய நிறுவனத்தில் அடுத்த படத்திலேயே தன் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ரஜினி ஒப்புக்கொண்டிருப்பது எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.











