சினிமா செய்திகள்

ஜெய்பீம் சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்றம் அறிக்கை

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை

தொடர்ந்து அந்தக்காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், ‘படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’

என்று மனுதாரர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொந்தளித்துப்போய் எதிர்க்கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர்.

உடனே, சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அதன் தலைவர் பரமு மற்றும் செயலாளர் வீரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அன்பான உறவுகளுக்கு,
வணக்கம்.

சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது.

படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.

சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு.

சூர்யா அண்ணன் எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்.
உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற”

என்ற அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts