சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பட சிக்கல் – சன் டிவி நிபந்தனை தயாரிப்பாளர் தடுமாற்றம்

டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் துக்ளக் தர்பார்.

லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

தற்போதைய சூழல் காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்ததாம்.

ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிடத் தயாராகிவிட்டதாம்.

ஆனால், ஏற்கெனவே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்திருந்தார்கள்.

எனவே, அவர்கள் தடையில்லாச் சான்று கொடுத்தால்தான் ஹாட் ஸ்டாருடனான ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்கிற நிலை.

இதனால், சன் தொலைக்காட்சியுடன் பலமுறை பேசியும் அவர்கள் தடையில்லாச் சான்று தர மறுத்து வருகிறார்களாம்.

தயாரிப்பாளர் விடாமல் போராடியதன் விளைவாக, சன் நிறுவனம் ஒரு நிபந்தனையுடன் தடையில்லாச் சான்று கொடுக்க முன்வந்திருக்கிறதாம்.

என்ன நிபந்தனை?

இதே தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் இன்னொரு படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா , சமந்தா உள்ளிட்டோர் நடிக்கும் அந்தப்படத்தின் உரிமையை எங்களுக்குக் கொடுங்கள், துக்ளக் தர்பார் படத்துக்குத் தடையில்லாச் சான்று தருகிறோம் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்களாம்.

இதைச் சற்றும் எதிர்பாராத தயாரிப்பாளர், என்ன முடிவு எடுப்பதெனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம்.

Related Posts