ஐடி ரெய்டில் சிக்கியது எப்படி? – விஜய்சேதுபதி விளக்கம்
இரண்டு நாட்களாக நடிகர் விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவின. சோதனை ஏன், எதற்கு? என்பதற்கு அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவுமே வெளிவரவில்லை.
இந்நிலையில், ‘96’ செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் ‘வருமான வரித்துறை’ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி கூறியதாவது…
என் வீட்டில் நடந்தது ரெய்டே அல்ல, அது சர்வே. என் முகம் தற்போது நிறைய இடத்தில் வருகிறது. அதனால் இவர் கணக்கு வைத்திருக்கிறாரா? இல்லையா? அவருக்கு கணக்கு எழுத வருகிறதா? என்று வைத்த சர்வே தான் அது. பணத்தின் வரவு, செலவு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சோதனை செய்தார்கள்.
வருமானவரித்துறையில் சர்வே என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்போது தான் தெரியும்.
கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரியை முன்னரே கட்டி வந்திருக்கிறேன். அதற்கான ரிட்டன்ஸை என் ஆடிட்டர் தாக்கல் பண்ணவில்லை. அவர் திடீரென்று போய் தாக்கல் செய்துள்ளார். ஆகையால், இதில் ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உடனே வந்து எல்லாம் சரியாக இருக்கா என்று சோதனை செய்தார்கள்.
செய்தி தவறாக பரவினால் மட்டுமே அனைவரிடமும் போய்ச் சேரும். அது ஒரு விளம்பரம் தான். தப்பாக பேசினால் மட்டுமே உடனே போய் சேரமுடியும். காசு கொடுத்தால் கூட அப்படி ஒரு விளம்பரம் கிடைக்காது. நம்மூரில் இப்போது கண்டதைப் பேசினால் தான் பப்ளிசிட்டி என்ற ட்ரெண்ட் இருக்கிறது.
நம்மூரில் கண்டபடி கத்தி பேசிவிட்டு, அதை நான் பேசவில்லை எனது அட்மின் பேசினாரு, மிமிக்ரி பண்ணிவிட்டார்கள் என்று சொல்லலாம். முதலில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது என் வீடு அல்ல. என் வீடு மாதிரி செட் போட்டு, செக் பண்ணியிருக்கிறார்கள் என்று பேசிச் சமாளித்தார் விஜய்சேதுபதி.
தொடர்ந்து அதுபற்றிக் கேள்விகள் வரவே அவற்றைத் தவிர்க்க, இந்தப்படம் பற்றி மட்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டார் விஜய்சேதுபதி.











