சினிமா செய்திகள்

அஜீத் 62 அறிவிப்பு வந்த அரைமணிநேரத்தில் வெளியான விஜய் 66 பட தகவல்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு.

அந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று முன்னிரவு 7.30 மணியளவில் விஜய்யின் 66 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை அறிவித்திருக்கிறார்.

அஜீத்தின் 62 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அரைமணி நேரத்தில் விஜய் 66 பட நாயகி பற்றிய அறிவிப்பு வெளியானதால் இரண்டு நடிகர்களின் இரசிகர்களும் அவற்றை வேகவேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts