குதிரைவால் – திரைப்பட விமர்சனம்
ஒருநாள் தூங்கிவிழிக்கும்போது நாயகன் கலையரசனுக்குக் குதிரைவால் முளைத்திருக்கிறது. 38 வயது, வைப்பகத்தில் வேலை, நடுத்தர வாழ்க்கை என இருக்கும் அவருக்கு இப்படி ஒரு விநோத சிக்கல்.காட்சிகளில் குதிரைவாலுடன் அவஸ்தைப்பட்டுக்கொண்டேயிருக்கிறார் கலையரசன். ஆனால் கதைப்படி அது உண்மையன்று. அப்படியானால் அது என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் படம்.
ரொம்பத் திமிர் பிடித்தவர்களை அவனுக்குக் கொம்பு முளைச்சிருக்கு என்பார்கள். அப்படி உண்மையிலேயே கொம்பு முளைத்தால் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையை பால்ய நினைவுகளைத் தேடியலையும் ஒருவனுக்குக் குதிரைவால் முளைக்கிறது என்று சொல்லிப் படமெடுத்திருக்கிறார்கள்.
கதைசொல்லல், திரைக்கதை உத்தி, காட்சிப்படுத்தல் ஆகியனவற்றில் இதுவரை தமிழ்த்திரையுலகம் காணாத முற்றிலும் புதிய முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறது படக்குழு.
நாயகன் கலையரசன், நாயகி அஞ்சலிபாட்டீல், சேத்தன்,ஆனந்த்சாமி, லட்சுமிபாட்டி ஆகிய அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.
பின்நவீனத்துவம் மாய எதார்த்தவாதம் போன்ற பதங்களை தன் வாழ்நாளில் கேட்டறிந்திருக்க முடியாத லட்சுமிபாட்டியின் நடிப்பும் வசன உச்சரிப்புகளும் வாழ்த்தப்படவேண்டியவை.
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் எண்பதுகளின் கிராமம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பன்மைப் படிமங்கள்.
பிரதீப்குமார், மார்டின் விஸ்ஸர் ஆகியோரின் இசையில் பாடல்கள் தனித்துக்கேட்டால் ஆழமானவை, பின்னணி இசை நன்று.
படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கும் இராஜேஷ், இலக்கிய உலகில் புழங்கும் சிறுபத்திரிகை வாசிப்பு அனுபவத்தைப் பெரிய திரையில் காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.(கல்குதிரையில் வெளிவந்த காண்டாமிருகம் சிறுகதையைச் சுட்டுவிட்டாராமே?)
காமம் இல்லாக்காதல் என்று சொல்லி சமாதானம் செய்துவிட்டு சிறுவன் சிறுமியை இணையராகச் சொல்லியிருப்பது பொருத்தமா?குழந்தைமையைக் கொல்வதாகாதா?
வாலில்லாக் குதிரை, அடித்தால் அழிந்துபோகும் வண்ணமயமான இருசாயி,உளவியலின் உளப்பகுப்பாய்வை ஆய்ந்த ப்ராய்ட் பெயர், காதறுத்துக்கொண்ட உலகப்புகழ் ஓவியர் வான்கா,நீலி, திருஷ்டி பொம்மையாக அறியப்பட்டிருக்கும் அரக்கனின் வாழ்க்கை, (உயரத்திலிருந்து உலகத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்) ஆகியவற்றுடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் உட்பட படத்தில் ஏராள குறியீடுகள்.
எம்.ஜி.ஆரை வைத்துக்கொண்டு காலங்காலமாக விசிலடிச்சான் குஞ்சுகள் என்று இகழப்பட்டவர்களாகவே இப்படத்திலும் அம்மக்களைச் சித்தரித்திருக்கிறார்கள்.
இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் ஆகிய இருவரும் தமிழ்த்திரையுலகில், திரைக்கதை உத்தியில் ஒரு புதிய பேசுபொருளை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளடக்கம் மிகப்பழசு, ஏற்றுக்கொள்ள இயலாதது.










