சினிமா செய்திகள்

தொட்டுவிடும்தூரத்தில் வெற்றி – படக்குழு நம்பிக்கை

அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக் ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகொட்லா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் தொட்டு விடும் தூரம். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத, வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரித்திருக்கிறார்.

கிராமத்தில் இருந்து காதலியைத் தேடி வரும் காதலனின் ஒரு காதல் பயணம் சார்ந்த கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் பாசத்தையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் நெடுநல்வாடை.அப்படத்தின் இயக்குநர் செல்வகண்ணன், இயக்குநராக வெற்றி பெற வேண்டுமென்பதற்காக அவருடைய பல நண்பர்கள் ஒருங்கிணைந்து அப்படத்தைத் தயாரித்தனர்.

இப்படத்திலும் அதுபோலவே இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக அவருடைய நண்பர்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமுதாயத்துக்குத் தேவையான கருத்தையும் உள்ளடக்கி தயாராகியிருக்கும் இப்படம் 2020 சனவரி 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் கதை மற்றும் சில காட்சிகளைப் பார்க்கும்போது வெற்றி இவர்களுக்குத் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்று நம்பிக்கையாகச் சொல்கிறார் படத்தை வெளியிடும் பி.டி.செல்வகுமார்.


Related Posts