தீதும் நன்றும் – திரைப்பட விமர்சனம்
நட்புக்குள் துரோகம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் இன்னொரு படம்.
ராசுரஞ்சித்,ஈசன்,சந்தீப்ராஜ் ஆகியோர் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். ஒரு திருட்டின்போது ராசுரஞ்சித்தும் ஈசனும் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப்ராஜ் தப்புகிறார்.
சிறையில் இருந்து இருவரும் வெளிவந்தபின்பும் சந்தீப்ராஜின் துரோகத்தால் நண்பர்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகிறது. அது எப்படி? என்பதைச் சொல்லும் படம் தீதும்நன்றும்.
ராசுரஞ்சித், ஈசன் ஆகியோர் வேடங்களுக்கேற்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.சந்தீப்ராஜும் குறை வைக்கவில்லை.
ராசுரஞ்சித் ஜோடியாக லிஜிமோல்ஜோஸும் ஈசன் ஜோடியாக அபர்ணாபாலமுரளீயும் நடித்திருக்கிறார்கள்.
காதல்,பரிதவிப்பு, கண்ணீர் ஆகிய எல்லாவற்றையும் தேவையான அளவு காட்டி நாட்டில் இதுபோல் கஷ்டப்படும் ஏராளமான பெண்களைப் பிரதிபலித்திருக்கிறார் அபர்ணாபாலமுரளி.
லிஜிமோல்ஜோஸ் அமைதியான அழகு. எப்பவும் நான் உனக்காகக் காத்திருப்பேன் என்று காதலனிடம் சொல்வது நன்று.
ராசுரஞ்சித் ஈசன் ஆகியோரின் நண்பராக வரும் இன்பா, வில்லன்களாக வரும் கலாலயன்சத்யா,கருணாகரன் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
கெவின்ராஜ் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கேற்ப இருக்கிறது.
சி.சத்யாவின் இசை படத்துக்குப் பலம். முத்தமிழின் பாடல்வரிகள் கதையின் கனத்தைக் காட்டியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ராசுரஞ்சித். பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் சலிப்பில்லாத திரைக்கதை படத்தை வேகமாக நகரவைத்திருக்கிறது.
தீதல்ல நன்று.











