விமர்சனம்

ஜப்பான் – திரைப்பட விமர்சனம்

பிரபல கொள்ளையன், கொள்ளையடித்த பணத்தின் மூலம் திரைத்துறையிலும் இயங்குகிறார்.கோயம்புத்தூர் நகைக்கடையில் நடக்கும் ஒரு பெரியகொள்ளையில் அவர் மீது பழி விழுகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிற்து? என்பதுதான் ஜப்பான் படம்.

கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார் கார்த்தி.எல்லாவற்றிலும் ஓர் அலட்சிய மனோபாவம் அவருக்கு இலகுவாகக் கைவந்திருக்கிறது.அதோடு, உடைகள், தோற்றம் ஆகியன மட்டுமின்ற வசன உச்சரிப்பிலும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அது கார்த்தியை மீறி ஜப்பானாக அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கிறார் அனுஇம்மானுவேல். பவுசு வந்ததும் பழசை மறக்கும் வேடம். அதற்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.காட்சிகள் குறைவென்றாலும் திரைக்கதை ஓட்டத்துக்கு அவர் வேடம் பெரும் உதவியாக அமைந்திருக்கிறது.

கார்த்தியுடனே வரும் வாகைசந்திரசேகர் வரவேற்புப் பெறுகிறார்.காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் விஜய்மில்டன், சுனில் ஆகியோரின் நடிப்பு படத்துக்குப் பலம்.ஒளிப்பதிவாளர், இயக்குநர் என வெற்றிகரமாக இயங்கும் விஜய்மில்டன் நடிகராகவும் வென்றிருக்கிறார்.

எதிர்பாராத வேடத்தில் ஜித்தன்ரமேஷ்.எதிர்பார்த்த மாதிரி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் தன்மையைப் பறைசாற்றுகிறது.பல இடங்களில் அவருடைய ஒளியமைப்பு காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ராஜுமுருகன்.திருடர்கள், பெரும்பாலும் உருவாவதில்லை அதிகாரவர்க்கங்களால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார்.வசனங்களில் அவருடைய இருப்பு நன்றாகத் தெரிகிறது.

தொடக்கத்திலிருந்தே, சட்டத்துக்கும் சமுதாயத்துக்கும் எதிர்மறையான செயல்களைச் செய்து வெறுப்பைச் சம்பாதிக்கும் கதாபாத்திரம் கடைசியில் தன் உண்மைமுகத்தை வெளிப்படுத்தும்போது அனைவரையும் கலங்க வைத்துவிடுகிறது. அந்தப்பாத்திரத்துக்கு உள்ளும் புறமும் பொருத்தமாக கார்த்தி இருக்கிறார்.

திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளைத் தாண்டி அடிப்படையான இந்த விசயம் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

– சுரா

Related Posts