வாழ்வு தொடங்குமிடம் நீதானே – விமர்சனம்
மதம் தாண்டிய காதல் என்றாலே சிக்கல்தான். அதிலும் ஓரினக்காதல் என்றால் என்னென்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சொல்லியிருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம்நீதானே.
கிராமத்து இஸ்லாமியப் பெண் நிரஞ்சனா நெய்தியார், நகரத்தில் வாழும் ஆவணப்பட இயக்குநர்
ஸ்ருதிபெரியசாமி ஆகிய இரு பெண்கள் காதலில் வீழ்கிறார்கள்.ஆணும் பெண்ணும் காதலித்தாலே வம்பு எனும்போது பெண்ணும் பெண்ணும் காதலித்தால்? பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. அவற்றின் பின் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.
ஆவணப்பட இயக்குநராக நடித்திருக்கும் ஸ்ருதிபெரியசாமி, இஸ்லாமியப் பெண்ணாக நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் ஆகிய இருவரும்தான் படத்தின் மையம். அவர்களும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.பிறர் அறிந்தால் அதிரும் காதலை வெளிப்படுத்தவும் முடியாமல் மூடிமறைக்கவும் முடியாமல் தவிக்கும் நேரங்களில் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
அர்ஷத் பெராஸ்,ஆறுமுகவேல், ஆர்.ஜே.பிரதீப் உள்ளிட்டோரும் கவனிக்க வைக்கின்றனர்.
எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன காட்சிகள்.கதையின் உணர்வை நாயகிகளின் கண்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தர்ஷன்ரவிக்குமாரின் இசை இதமாக அமைந்திருக்கிறது.
ஜெயராஜ் பழனி எழுதி இயக்கியிருக்கிறார்.இயற்கைக்கு முரணான உணர்வை, உறவுச்சங்கிலித்தொடரை அறுக்கும் உறவை மையமாகக் கொண்ட கதைக்கரு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
ஆனாலும் சொல்ல வந்த கருத்தைத் திரைமொழியில் சொல்லும் கலை கைவந்திருக்கிறது.
– குமரன்
இப்படம் ஷார்ட்ப்ளிக்ஸ் (ShortFlicks) தளத்தில் இன்றுமுதல் (செப்டம்பர் 28,2023) காணக்கிடைக்கிறது.











