சினிமா செய்திகள்

டிசம்பர் 24 மதியம் வெளியாகிறது வா வாத்தியார் – ஏன் மதியம்?

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவித்தார்கள்.அதன்பின் டிசம்பர் 12 அன்று வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

ஆனால்,சொன்னபடி படம் வெளியாகவில்லை.

அதற்குக் காரணம், இந்தப் படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற சொத்து ஆட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 இலட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ஆக உள்ளது.

அந்தத் தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்காலத் தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்து ஆட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தையிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

அந்த வழக்கு இன்னும் முடியவடையவில்லை. இதனால் ‘வா வாத்தியார்’ வெளியீட்டுக்கான தடை நீடித்து வருகிறது.

இதனால்தான் இப்படம் டிசம்பர் 12 அன்று வெளியாகாது என படக்குழு அறிவித்தது.

இந்தப்படம் எப்போது வெளியாகும்? என்ன நடக்கிறது?

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், இந்தப்படத்துக்கு ஐதராபாத் நீதிமன்றத்திலும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம்.

இதனால் இப்போது, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனக்கு உள்ள சிக்கல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டே வருகிறாராம்.

இந்நிலையில் படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திடமிருந்து வெளியே எடுத்து மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்து அதைச் செயல்படுத்தும் முடிவில் இறங்கியிருக்கிறாராம்.

அவருடைய எண்ணப்படி எல்லாம் சரியாக நடந்துவிட்டால், டிசம்பர் 24 ஆம் தேதி மதியம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம்.

ஏன் மதியம்?

இப்படம் ஏற்கெனவே, இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவித்து தள்ளிப்போய்விட்டது.அதனால் அடுத்தமுறை வெளியிடும்போது கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக முதன்முறையாக 24 ஆம் தேதி மதியத்தில் படம் வெளியாகிறது என்று அறிவித்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Related Posts