சினிமா செய்திகள்

அருண்விஜய் புதியபடத்தில் சிக்கலா? உண்மை என்ன?

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்த டிமாண்டி காலனி 2 படத்தை பிடிஜி யுனிவர்சல் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்படமே பெரிய வெற்றி நல்ல இலாபம் என்பதால் அடுத்தடுத்து படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

அந்நிறுவனம் இப்போது வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் மற்றும் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் ரெட்டதல ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றில்,வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் முழுமையாகத் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கிறது.ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றிய அறிமுக இயக்குநர் அருள் சக்தி முருகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.

படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஏன்? என்று விசாரித்தால்,

இயக்குநர் அருள் சக்தி முருகன் சொன்ன மையக்கதை பிடித்துத்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அருண்விஜய்.அதன்பின் அம்மையக்கதையை முழுநீளத் திரைக்கதையாக்கி அருண்விஜய்யிடம் சொன்னபோது அது அவருக்குப் பிடிக்கவில்லையாம்.

இதனால் இயக்குநருக்கும் கதாநாயகனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். இதனால் படம் நடக்குமா? என்பதே சந்தேகமாகிவிட்டதெனச் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றார்கள்.

அதேசமயம், தயாரிப்பு நிறுவனத்தின் முயற்சியில் அருள் சக்தி முருகனின் கதைக்கு திரைக்கதை எழுத பொன்.பார்த்திபனை ஒப்பந்தம் செய்து அவருக்குப் பெரும் தொகையை கொடுத்திருக்கிறார்கள். அவர் எழுதிய திரைக்கதை அருண்விஜய்க்கு திருப்தியாக அமைந்துவிட்டதாம்.

இதனால் சிக்கல் தீர்ந்துவிட்டது என்றாலும் படத்தின் பட்ஜெட்டில் புதிதாக ஒரு செலவு சேர்ந்துவிட்டதென தயாரிப்பு நிறுவனம் அதிருப்தியில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் கேட்டால், இயக்குநரும் பார்த்திபனும் நண்பர்கள்தாம்.இயக்குநரே தனக்கு உதவியாக பார்த்திபனை வைத்துக் கொண்டார்.அவர் கூடுதல் திரைக்கதை பங்களிப்பு செய்துள்ளார்.

படப்பிடிப்பு தாமதமானதுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை,ஹீரோவின் முந்தைய பட வேலைகள் காரணமாக படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனது.மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடக்கும் என்று சொல்கிறார்கள்.

நல்லது. நடக்கட்டும்.

Related Posts