சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு – அதிரடி தகவல்

சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கோயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே இன்னொரு படத்தில் நடிக்க அவர் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சிம்பு, தனது பிறந்தநாளான பிப்ரவரி 3,2025 ஆம் தேதியன்று மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டார்.

அவருடைய 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியானது.

இவற்றில் எஸ்டிஆர் 49 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

எஸ்டிஆர் 50 படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

அதைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் 51 ஆவது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்றும்,காட் ஆஃப் லவ் என்று பெயரிட்டு அந்தப்படத்துக்கான முதல்பார்வையும் வெளியிடப்பட்டது.

ஆனால், 49 ஆவது படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட டான் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக அந்தப்படம் தள்ளிப்போனது.

அதன் காரணமாகத்தான், வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தை ஒப்புக்கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வெற்றிமாறன் படம் நிறைவடையும் முன்பு, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

அதோடு இன்னொரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது புதியதகவல்.

அஸ்வத் மாரிமுத்து படம் தொடங்கி வேகமாக முடிவடைந்துவிடும் என்றும் அதன்பின், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதும்தான் அந்தப் புதியதகவல்.

சிம்புவுக்கேற்றாற் போல் ஓர் அதிரடியான கதையை உருவாக்கி அவரிடம் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.அந்தக் கதை மிகவும் பிடித்துப்போனதால், அஸ்வத் மாரிமுத்து படம் முடிந்ததும் இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று சிம்பு சொல்லியிருக்கிறாராம்.

2026 ஆம் ஆண்டு சனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.அரசன் படப்பிடிப்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு ஆகிய இரண்டிலும் மாறி மாறி நடிக்கவிருக்கிறார் சிம்பு.

இவற்றில் அஸ்வத் மாரிமுத்து படம் சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் முழுமையாக முடிவடைந்துவிடும் என்றும் அதன்பின்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென்றும் சொல்கிறார்கள்.

Related Posts