சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் தேர்வு – கொண்டாடும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன், ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்து வருகிறார்.

அவருடைய தயாரிப்பில் முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘கனா’ படம் உருவானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னணியில் இருக்கும் ரியோ நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை ‘ஸ்மைல் சேட்டை’ யூ டியூப் சேனல் கார்த்திக் இயக்கியுள்ளார்.

நாயகியாக ஷெரில் நடிக்க, நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், யூ டியூப்பில் பிரபலமானவர்களை ஒன்றிணைத்து, இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், படத்தொகுப்பாளராக ஒலிஃபர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் பெயர் இன்று (மார்ச் 18) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘என் அண்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் முதல் வரி இது.

மிகவும் தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கக் கூடிய இந்தப்பெயரைத் தேர்வு செய்த சிவகார்த்திகேயனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Related Posts