மக்கள் வயிற்றலடித்து சம்பாதிப்பது பெருமையா? – சர்கார் குழுவுக்கு காரமான கேள்வி
விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முதல் நாளே இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
அதாவது, முதல் நாளே 30 கோடி ரூபாயை வசூலித்து, இதுவரை வேறெந்த தமிழ்ப் படமும் நிகழ்த்தாத சாதனையைப் படைத்துள்ளது.
இந்த வசூல் விவரத்தை, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தான் முதன்முதலாக ட்விட்டரில் பதிவிட்டார். உடனே அவருக்கு எதிராக அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்தனர்.
‘ஆமாம், டிக்கெட் விலையைவிட பாப்கார்ன், பார்க்கிங்னு ரெண்டு மடங்கு அதிகம் வைத்து மக்களோட வயித்துல அடிச்சி சம்பாதிக்கிறத பெருமையா சொல்லிக்கோ’ என அஜித் ரசிகர் ஒருவர் ஒருமையில் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த தனஞ்ஜெயன், ‘தம்பி, அது இந்தப் படத்துக்கு மட்டுமில்லையே… எல்லா படங்களுக்கும் தானே இதே சார்ஜ் பண்றாங்க’ என்றார்.
‘எல்லா படங்களுக்கும் பெருவாரியான மக்கள் போவதில்லையே… புதுப்படம் ரிலீஸாகாதுனு தியேட்டர் ஸ்டிரைக்ல இருந்தப்போ உங்க நிலைமைய யோசிச்சுப் பாருங்க. மக்கள் தூக்கிப் போட்டாங்க போகவேண்டியதுதான் இண்டஸ்ட்ரியை மூடிக்கிட்டு’ என அதே அஜித் ரசிகர் தெரிவித்துள்ளார்.
இப்படி பல அஜித் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப, ‘பொங்கலுக்கும் இதேமாதிரி தல படத்துக்கும் இப்படி கலெக்ஷன் வரும். மக்கள் செலவு பண்ணுவாங்க. அப்ப சொல்றேன் எவ்வளவு கலெக்ஷன் ஆச்சுனு… ஓகே?’ என்று சொல்லி இந்தப் பிரச்சினைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தனஞ்ஜெயன்.
அஜித் படம் வெளியானாலும் இதேபோல் நடக்கும் என்பதில் மாற்றமில்லை. அதுவும் குற்றம் இதுவும் குற்றம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். அதோடு மக்கள் வயிற்றலடித்துச் சம்பாதிப்பதைச் சொல்லிப் பெருமைப்படுவதும் பெரிய குற்றம் என்பதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்களோ? என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.











