ரத்னம் – திரைப்பட விமர்சனம்
அதிரடிச் சண்டைகள், ஆரவாரமான சண்டைகள், இடிமுழங்கும் சண்டைகள் என் விதவிதமான சண்டைக்காட்சிகளை இணைக்க ஒரு பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருக்கும் திரைக்கதை அதற்கு வலுச்சேர்க்கும் பாசம் மிகுந்த ஒரு மையக்கதை என்பது இயக்குநர் ஹரியின் சூத்திரம்.அதற்கேற்பவே ரத்னமும் இருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் அடியாள் வேலை பார்க்கிறார் விஷால்.ஒரு கட்டத்தில் நாயகி பிரியாபவானிசங்கரைப் பார்க்கிறார்.அவருக்கு உயிராபத்து இருக்கிறது என்பதால் சம்பளம் வாங்காத பாதுகாவலாகிறார்.இவை ஏன்? எதனால்? என்பனவற்றிற்கான விடைதாம் படம்.
ஓங்குதாங்கான விஷாலுக்குப் பொருத்தமான வேடம்.அவரும் பறந்து பறந்து அடித்துத் துவைக்கிறார். பீட்டர்ஹெயின்,திலிப்சுப்பராயன், விக்கி,கனல்கண்ணன் ஆகிய நான்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களை வைத்துக் கொண்டு அதகளம் செய்திருக்கிறார்கள்.சண்டையில் மட்டுமின்றி பாசம் காட்டுவதிலும் தேர்ச்சி பெறுகிறார் விஷால்.பிரியாபவானிசங்கருக்கும் அவருக்குமான பாசம் யாரும் எதிர்பாராதது.
பிரியாபவானிசங்கருக்கு ஒன்று இரண்டு பாத்திரங்கள்.இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி நடிப்பில் நற்பெயர் பெறுகிறார். நகைச்சுவைக்காக நடிக்க வைக்கப்பட்டிருக்கும் யோகிபாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
ஹரி இயக்கும் படங்களில் ஏராளமான நடிகர்கள் இருப்பார்கள்.இந்தப்படத்திலும் அப்படித்தான்.
கவுதம்மேனன்,முரளிசர்மா,ஹரிஷ்பெரடி,முத்துக்குமார்,ஜெயப்பிரகாஷ்,மொட்டைராஜேந்திரன்,டெல்லிகணேஷ், திருத்தணி மகேஷ்,கஜராஜ்,விடிவிகணேஷ்,ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம்,ரங்கநாதன்,கணேஷ் வெங்கட்ராம், கும்கி அஸ்வின்,அஞ்சலிதேவி,துளசி உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.
இதனால் எல்லாக்காட்சிகளிலும் ஏதாவதொரு புதுவிசயம் இருக்கிறமாதிரி இருக்கிறது.
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ஹரியின் பாணியையும் மீறக்கூடாது விஷாலின் வேகத்துக்கும் தடையாகிவிடக்கூடாது அதேசமயம் தன்னுடைய தனித்தன்மையையும் நிறுவவேண்டும் என உழைத்திருக்கிறார்.அதனால் காட்சிகள் விஸ்வரூபமெடுத்திருக்கின்றன.
துள்ளல் பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் படத்தின் வேகத்துக்கு வேகம் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.
ஹரியின் படங்களுக்கு படத்தொகுப்பாளரின் பங்களிப்பு சரியாக அமைந்தாகவேண்டும்.இந்தப்படத்தின் தொகுப்பாளர் டிஎஸ்ஜே அதற்கேற்பவே அமைந்திருக்கிறார்.
தன் வழக்கப்படி ஒரு திரைக்கதையை எழுதி அதற்குள், நாயகன் விஷால் மது குடித்துக் கொண்டேயிருக்கிறார் அதை வைத்துக் கொண்டு அதற்கு எதிரான வசனங்கள், படத்தின் நாயகி நீட் தேர்வு எழுதுகிறார் என்பதை வைத்துக்கொண்டு அதன் மீதான விமர்சனங்கள், சமுத்திரக்கனி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் ஓட்டுக்குப்பணம் கொடுப்பதைச் சாடுதல், அரசியல்வாதிகள் மீதான வெகுமக்களின் எண்ணங்களை வெளிப்படுத்துதல் என சமகாலச் சிக்கல்களையும் கவனப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார் இயக்குநர் ஹரி.
– முத்து











