தமிழாசிரியராக நடிக்கும் ரஜினி ? புதிய தகவல் ! #Rajini169
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி வந்திருக்கும்.
அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக் கொண்டு வெளியான இந்தப் படத்துக்கு பெரிதளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ரஜினி படமென நம்பி வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே. எது எப்படியோ, வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்ஷனைப் பெற்றுவிட்டது.
இந்நிலையில், ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. ரஜினியை அடுத்து இயக்க இருப்பது யாரென்பது திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. துல்கர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, பேட்ட படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் பெயர்கள் அடிபட்டு வந்தன. இந்நிலையில், ரஜினியின் தேர்வாக பாண்டிராஜ் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இந்தப் படம் உருவாகும் என்று சொல்கிறார்கள். இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே சொல்கிறார்கள். பாண்டிராஜ் கைவசம் வைத்திருக்கும் கதையில், ஒரு கண்டிப்பான தமிழாசிரியராக நாயகன் இருப்பாராம். ஆக, தமிழாசிரியராக ரஜினி ரோல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, பாண்டிராஜின் டெம்ப்ளேட்டான குடும்பப் பின்னணியில் இப்படம் இருக்குமாம்.
கடைக்குட்டிச் சிங்கம், நம்மவீட்டுப் பிள்ளை என அடுத்தடுத்து ஹிட் கொடுத்துவருகிறார் பாண்டிராஜ். தற்பொழுது, சூர்யா நடிக்க சன்பிக்சர்ஸூக்காக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை முடித்த கையோடு, ரஜினியை இயக்க தயாராவார் என்று சொல்லப்படுகிறது.











