விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைகிறதா? விஜய் 68 அப்டேட் !

தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் எப்போது இணைத்தாலும் ஹிட் தான். அப்படியானது விஜய் – அட்லீ காம்போ.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இது, விஜய்யின் 65வது படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் 66வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க இருக்கிறார்.
விஜய்யின் 67வது படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், விஜய்க்காக வெற்றிமாறன், மகிழ் திருமேனி உள்ளிட்ட சில இயக்குநர்கள் கதையுடன் தயாராக இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் விஜய்யின் 67வது படத்தை இயக்கலாம்.
தொடர்ந்து, விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது, ஷாரூக் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் அட்லீ. ஷாரூக் படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லீ கூட்டணி விஜய் 68க்காக இணையும் என்று சொல்கிறார்கள்.
பொதுவாக, ஒரு படம் முடிவடைந்தப் பிறகே அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் விஜய். அதனால், பீஸ்ட் முடிந்தப் பிறகே மற்ற படங்கள் பற்றிய உறுதியாக தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.