October 15, 2026
சினிமா செய்திகள்

மாநாடு டிவி உரிமை கலைஞர் டிவியிடமிருந்து கைமாறக் காரணம் ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய மூவருக்கும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. படத்துக்கும் நல்ல வசூல் என்றே டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையானது கலைஞர் டிவியிடமிருந்து கைமாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான உறுதியாக காரணமும் தெரியவந்துள்ளது.

என்னவென்றால், மாநாடு படத்தின் ரிலீஸ் சிக்கலின் போது, பொருளாதாரப் பிரச்னையை சரி செய்வதற்காக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கென எட்டு கோடி ரூபாய் எனும் பெரும் தொகையைக் கொடுத்து உதவியது கலைஞர் டிவி.

இந்நிலையில், தற்பொழுது மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமையானது விஜய் டிவியிடம் சென்றிருக்கிறது. விஜய் டிவி தரப்பானது எட்டு கோடிக்கு பேசி முடித்துவிட நினைக்கிறார்கள். ஆனால், படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் 10 கோடிக்கு விற்றுவிட படக்குழு யோசிக்கிறது. எப்படியிருந்தாலும், மாநாடு பட டிவி உரிமை விஜய் டிவி வசம் சென்றுவிட்டது உறுதி.

இந்நிலையில், ஏன் கைமாறியது என்று விசாரித்தால், பொங்கலுக்கு மாநாடு படத்தை ஓளிபரப்பும் திட்டத்துடன் கலைஞர் டிவி படத்தை வாங்கியது. ஆனால், படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையானது சோனி லிவ் தளத்தின் வசமிருக்கிறது.

சோனி லைவ் நிறுவனமானது மாநாடு ஓடிடியில் வெளியாகி 75 நாட்களுக்குப் பிறகே சேட்டிலைட்டில் ஒளிபரப்பாக வேண்டுமென ஒரு கண்டிஷன் போட்டு வைத்திருக்கிறது. இந்தக் காரணத்தால் படத்தை பொங்கலுக்கு டிவிக்கு கொண்டுவர முடியாது. அதனால், கலைஞர் டிவி பின்வாங்கி விட்டது.

இந்த ஒரு காரணத்தால் மட்டுமே கலைஞர் வசமிருந்த உரிமை விஜய் டிவி வசம் சென்றிருக்கிறது. படத்தில் திமுக-வைத் தாக்கும் விதமான வசனங்கள் இடம்பெறுவதால் கலைஞர் டிவியானது உரிமையை வாங்கவில்லை என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையில்லை.

Related Posts