வீரமரணமடைந்த வீரரோடு விஜய்சேதுபதி ஒப்பீடு – பாராட்டும் சர்ச்சையும்
பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கபெரணசிங்கம்.
இந்தப்படத்தின் குறுமுன்னோட்டத்தில் இடம்பெற்ற, சாதி மத, அரசியலைத் தாண்டி இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்துத் தான் இன்று மொத்த உலக அரசியல் நடக்கிறது.
“இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க, 2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்”
“நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிட்டு இருங்காங்க, அந்த (சோலார்) கரெண்ட் கம்பெனி காரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கிறான் பிளேட் கழுவ. பார்த்துட்டு சும்மா இருக்க சொல்ரியா?”
ஆகிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வசனங்களை விஜய்சேதுபதி பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜூன் 15 அன்று,இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் கொல்லப்பட்ட 3 வீரர்களில் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. பழனிக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் இராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.
பழனியின் வீர மரணம் இராமநாதபுரம் மாவட்டத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பழனியின் உடல் இன்று (ஜூன் 17) காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், பழனியின் மரணம் தொடர்பாக,கபெரணசிங்கம் படத்தைத் தயாரித்து வரும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது…..
உறைய வைக்கும் குளிரில் காவலுக்குப் பசியுடனும், தாகத்துடனும், குளிருடனும் நின்று, தங்கள் குடும்பத்துக்குக் கதைகள் சொல்ல திரும்பி வரமுடியாத மனிதர்களுக்கு… உங்கள் தியாகத்துக்கு தலை வணங்குகிறோம். உங்கள் ஆன்மாக்கள் அமைதி அடையட்டும். தமிழ் வீரன் பழனியில் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் நம்மில் ஒருவர் போன்றவர். அவர் நம் ரணசிங்கம். ஒரு போர்வீரரின் மரணத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இங்கே எங்களால் செய்ய முடிந்த சிறிய உதவி.. பழனியின் தியாகத்துக்காக அவரது குடும்பத்தினருக்கு 5 இலட்ச ரூபாய் வழங்குகிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்.”
இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஒரு திரைப்பட நிறுவனம் மரியாதை செய்ததற்குப் பாராட்டுகள் கிடைத்துவரும் அதேநேரம், மறைந்த இராணுவ வீரரை திரைப்படக் கதாநாயகனோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.











