சினிமா செய்திகள்

தனுஷை மறந்த சேரன் – இரசிகர்கள் கேள்வி

2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.இப்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்போது அவர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ளார். நடிகர் ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஜெயில் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்’ என்னும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடலை ஜூன் 15 ஆம் தேதி மாலை, நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

அவற்றில் சில வரிகள்…..

காத்தோடு காத்தானேன்

கண்ணே உன் மூச்சானேன்

நீரோடு நீரானேன்..உன்கூட மீனானேன்

காகிதம் போல உன்மேல

ஓவியம் வரையும் நகமானேன்

மோகத்தில் பெண்ணே..உன்னால

முத்தங்கள் வாழும் முகமானேன்

இலை மறைவில் மறைந்திருந்தோம்..

மழைத்துளியாய் கலந்திருந்தோம்….

காதல் ததும்பும் பாடல் வரிகளோடு தனுஷ் மற்றும் அதிதி ராவ்-இன் குரலும் சேர்ந்து தங்களை மெய்மறக்கச் செய்துவிட்டதாக இரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் சேரன் தன் ட்விட்டர் பக்கத்தில்,இயக்குநர் வசந்தபாலனின் ஜெயில் படத்தின் பாடல் கேட்டேன்.. ஜீவியின் இசையும் கபிலனின் வரிகளும் இந்த லாக்டவுனில் அழுத்தம் கூடியிருக்கும் மனதை விடுவிக்கிறது.. கேளுங்கள். பாருங்கள்.. காட்சிகள் மனதினுள் இளங்காற்றாய்….

என்று பாராட்டியிருந்தார்.

அவருடைய பாராட்டில் பாடலைப்பாடிய தனுஷ் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் தனுஷையும் பாராட்டலாமே, அவரை ஏன் பாராட்டவில்லை என்று இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னொரு படத்தின் பாடலைப் பெருந்தன்மையாகப் பாராட்டினாலும் வம்புதான் போல.

Related Posts