சினிமா செய்திகள்

குட்டிரேவதி ஹரிகிருஷ்ணன் அக்‌ஷிதா தமிழ்சினிமாவின் நம்பிக்கைகள் – மாலாமணியன் உறுதி

ஒற்றை மனுஷியாய் ஓடியாடி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மாலா மணியன்.

திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்ட பெரிய நிறுவனங்களே படமெடுப்பது ஆபத்து என்று ஒதுங்கிக் கொள்ள கலை மீதான ஆர்வமும் திட்டமிடுதலும் இவற்றிற்கு மேலான தன்னம்பிக்கையும் மாலாமணியனை இயங்க வைத்தது.

அதன்விளைவு கவிஞர் குட்டிரேவதி இயக்கத்தில் ஓர் அழகான திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் சிறகு. கவிஞர் இயக்குநரென்றால் படத்தின் தலைப்பும் கவி பாடும் போல.

மெட்ராஸ் படத்தில் ஜானியாக நடித்து கவனத்தை ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இந்தப்படத்தில் நாயகன். அக்‌ஷிதா எனும் புதுமுகம் நாயகி.

உறவுகளின் புரிதல் தேடி பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை பயணமும் இசையும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம் கொண்ட இப்படத்துக்கு இசை அரோல் கொரோலி, ஒளிப்பதிவு ராஜா பட்டாஜார்ஜி, படத்தொகுப்பு அருண்குமார் என வலிமையான தொழில்நுட்பக் கூட்டணி அமைந்துள்ளது.

MalaManyan

MalaManyan

இப்பட உருவாக்கம் குறித்து தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் மாலாமணியன்…….

கையில் பணமே இல்லாமல் படமெடுக்க இறங்கினேன் என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் அப்படித்தான் நடந்தது.

ஊடகங்களிலும் திரைத்துறையிலும் பல்லாண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த முயற்சியில் இறங்கினேன்.

தற்போதைய வணிக ரீதியான இலக்கணங்களுக்கு உட்பட்டே நல்ல திரைப்படங்களைத் தர முடியும் என்பது என் நம்பிக்கை.

அதை மட்டுமே நம்பி, நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நம்பி வாருங்கள், நீங்களும் ஒரு பட உருவாக்கத்தில் பங்காற்றீனீர்கள் என்கிற பெருமையோடு முதலீட்டுக்கும் உத்தரவாதம் என்று அழைப்பு விடுத்தேன்.

கலை மீதான ஆர்வமோ? என் மீதான நம்பிக்கையோ? நான் கேட்ட மாதிரி பல நண்பர்கள் ஆர்வமுடன் இணைந்தார்கள்.

பல கதைகளைக் கேட்டு கடைசியில் குட்டிரேவதி சொன்ன கதையில் திருப்தி வந்தது. அப்போதும் முழுமையாக எழுதுங்கள் பிறகு பார்க்கலாம் என்றேன். அவர் எழுதிக் கொண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது. படப்ப்டிப்பைத் தொடங்கினோம்.

படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள், படப்பிடிப்பு, அதற்குப் பிந்தைய வேலைகள் ஆகிய அனைத்தையும் திட்டமிட்டு எழுதினோம். அதன்படியே செயல்பட்டோம். இப்போதுவரை எல்லாமே மிகச்சரியாக நடக்கிறது.

இலக்கல்ல பயணமே வாழ்க்கை என்பார்கள் அது நிஜத்திலும் நடந்தது. இந்தப்படத்தின் கதையிலும் அது இருக்கிறது.

இசை ஆர்வமிகுநத நாயகன், தேடல் மிகுந்த நாயகி ஒருவருக்கொருவர் பெரிய அறிமுகமில்லாத நிலையில் நீண்ட பயணமொன்றில் அவர்கள் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் படம்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மெல்லிய உணர்வுகளைத் தட்டியெழுப்பி ஆனந்தாமாய் கண்கள் கசிய வைக்கிற ஓட்டம் படத்தில் இருக்கிறது.

படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடக்கின்றன. ஜூன் மாதத்தில் பாடல்கள் வெளியீடு அதற்கடுத்து வருகிற பொருத்தமான நாளில் படம் வெளியீடு என்று திட்டமிட்டிருக்கிறோம்.

இப்படம் மூலம் சில தயாரிப்பாளர்களும் ஒரு நல்ல இயக்குநர் மற்றும் நாயகன் நாயகியும் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். அரோல்கரோலியின் இசை பெரிதும் பேசப்படும்.

இவையெல்லாம் இன்றைய என் நம்பிக்கை நாளைய நடைமுறை

என்று ஆணித்தரமாகப் பேசும் மாலாமணியனின் நம்பிக்கை வெற்றியடைய வாழ்த்துகள்

– அ,தமிழன்பன்

Related Posts