96 படம் குறித்து இளையராஜாவின் பேட்டியும் எதிர்ப்பும்
அவ்வப்போது ஏதாவது கருத்துகளைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவார் இளையராஜா.
அண்மையில் அவர் அளித்த காணொலி நேர்காணல் ஒன்றில், விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது தவறான விசயம் என்றும், எண்பதுகளில் நடக்கிற கதையாக இருந்தாலும் சொந்தமாகப் பாடல் போட்டிருக்கவேண்டும் அந்த இசையமைப்பாளருக்கு அந்த ஆண்மை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார் இளையராஜா.
இதற்குப் பல எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து இதழாளர் கோபாலகிருஷ்ணன் எழுதியிருப்பதாவது……….
திரு இளையராஜா அவர்களே, நீங்கள் இசையிலேயே மூழ்கி இந்த உலகில், சினிமாத் துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாதவராக இருக்கலாம்.
இன்றைய படங்களில் உங்கள் இசையும் பாடல்களும் இரண்டு வகைகளில்் பயன்படுத்தப்படுகின்றன. சொல்லப் போனால் முன்று வகைகளில். முதல் வகை உங்கள் பாடல்களின் சாயலில் பாடல்களை உருவாக்குவது. அது உங்களுக்கு மட்டும்தான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. இரண்டாவது உங்கள் பாடல்களையும் இசையையும் திரைபபடங்களின் சிச்சுவேஷனுக்கு அப்படியே பயன்படுத்துவது. ஒரு fun element ஆக. இதை அதிகம் செய்தது உங்கள் மகன் யுவனும் தம்பி மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபுவும்தான்.அவர்களை நீங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. மூன்றாவது உங்கள் பாடலை ஒரு காலக்கட்டத்தின் சின்னமாகப் அக்காலக்கட்ட மக்களுடன் இரண்டறக்கலந்துவிட்ட விஷயமாகப் பதிவு செய்வது,. பெரும்பாலும் பீரியட் படங்களில் உங்கள் இசையும் பாடல்களும் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. 96 படத்தில் உங்கள் பாடல்கள் இவ்வாறுதான் பயன்படுத்தப்பட்டன.
இது எந்த விதத்திலும் திருட்டோ இசையமைப்பாளரின் இயலாமையோ ஆகாது. மாறாக உங்களை கவுரவப்படுத்துவதுதான். சொல்லப்போனால் இதைச் செய்ய ஏற்பது சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரின் பெருந்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும் அப்படி எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. படத்தைக்கூட பாரக்காமல் இப்படிச் செய்வது இசையமைப்பாளரின் திறமையின்மை, ஆண்மையின்மை என்றெல்லாம் உளறிக்கொட்டாதீர்கள்.
அனைவரும் பெருந்தன்மையுடன் இருந்துதான் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. குறைந்தபட்சம் சின்னதனங்கள் இல்லாமல் இருங்கள். அல்லது அவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.











