சினிமா செய்திகள்

பிரபுதேவாவின் இன்னொரு படச்சிக்கல் – தேவி 2 காரணமா?

பிரபுதேவாவிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் ஏ.சி.முகில்செல்லப்பன். அவருக்காக பிரபுதேவா தேதிகள் கொடுத்து தொடங்கப்பட்ட படம் பொன்மாணிக்கவேல். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.

இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் சதுரங்க வேட்டை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றிய டி.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு பாடல் படமாக்க வேண்டியிருக்கிறதாம்.

இதற்காக புதிய பாடல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துவிட்டாராம் டி.இமான். அதன் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

தபாங் 3 இந்திப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இந்தப்படத்தின் பாடல் காட்சியைப் படமாக்க தேதி கேட்டபோது உடனே கொடுத்தாராம் பிரபுதேவா.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் அவர் கொடுத்த தேதிகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டது என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாகவே படப்பிடிப்பு நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது,

படத்தில் பணியாற்றிய பலருக்கும் சொன்னபடி சம்பளம் கொடுக்கப்படவில்லை, தான் தேதி கொடுத்தும் படப்பிடிப்பு நடக்கவில்லை ஆகிய விசயங்களால் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரபுதேவா கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்,

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனால் எப்படியும் ஒரு மாதம் கழித்துத்தான் நம் படத்தை வெளியிடமுடியும் எனவே படப்பிடிப்பை மெதுவாக நடத்துவோம் என்று சொல்லப்படுகிறதாம்.

நிறுவனம் சொல்லும் இந்தக்காரணத்தைப் படக்குழுவினரே நம்பவில்லை, படப்ப்டிப்பு நடத்தத் தங்களிடம் பணம் இல்லை என்பதை மறைப்பதற்கு வாய்ப்பாக தேவி 2 படம் அமைந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

Related Posts