சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 அறிவித்தபடி வெளியாகுமா?

2016 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார்.

காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பெற்று மீண்டும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி பிப்ரவரி 27 ஆம் தேதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் அறிவித்தபடி படம் வெளியாகுமா? என்பது சந்தேகமே என்கிறார்கள்.

ஏனெனில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அந்தத் தேதிக்குள் நிறைவடையாது என்று சொல்லப்படுகிறது. அதனால் சொன்னபடி வெளியாகாது என்கிறார்கள்.

அதேசமயம், அந்தத் தேதியில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.ஆனால் அப்படம் வராது என்று நம்பி இந்தப்படத்தை அறிவித்தாராம் விஜய் ஆண்டனி.

இப்போது அந்தப்படம் வெளியாவது உறுதி என்றாகிவிட்டதாம். அதனால் தன் படத்தைத் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என விஜய் ஆண்டனி நினைக்கிறாராம்.

இரண்டில் எது உண்மை? என்பது விஜய் ஆண்டனிக்கு மட்டுமே வெளிச்சம்.

மொத்தத்தில் இப்போது அறிவித்தபடி படம் வெளியாவது உறுதியில்லை என்பதுதான் பேச்சு.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts