பதான் இந்திப்படம் இன்று வெளியானது – எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன்?

பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘பதான்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது.
இதில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையும், ஷாருக்கான் பச்சை, வெள்ளை ஆடையும் அணிந்திருந்தனர். இதில் தீபிகா உடை ஒரு மதத்தையும், ஷாருக்கான் உடை பாகிஸ்தான் நாட்டுக் கொடியைக் குறிப்பிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இந்தப் பாடல் காவி உடையை அவமதிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும், இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதன்பிறகு சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்தன.
இந்தப்படத்தின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த திரையரங்குகள் மீது தாக்குதல், இந்தப்படத்துக்குத் தணிக்கைச் சான்று கொடுக்கக்கூடாது என்கிற முழக்கங்கள் ஆகியன பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இன்று அப்படம் வெளியாகியுள்ளது.
முன்பு எதிர்த்த யாரும் இன்று அப்படம் குறித்து எதுவும் பேசவில்லை. இத்தனைக்கும் தீபிகாபடுகோன் காவி உடை அணிந்து படுகவர்ச்சியாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் அதுகுறித்து யாரும் எதுவும் பேசவில்லை.
அதற்குக் காரணம் படத்தின் உள்ளடக்கம்.
இந்திய ஒன்றிய அரசு, காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குகிறது. அதனால் கோபமாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவதளபதி, இந்தியாவுக்கெதிராக ஒரு போர் தொடுக்கிறார். அதை ஷாருக்கானும் தீபிகா படுகோனும் இணைந்து முறியடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதனால் இப்படத்தை எதிர்க்க யாரும் துணியவில்லை என்கிறார்கள்.