February 4, 2023
சினிமா செய்திகள்

தனுஷுக்குப் போட்டியாக ஜெயம்ரவி – பிரபல நிறுவனத்தின் சதித்திட்டமா?

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள வாத்தி படம்தான் அவருடைய அடுத்த வெளியீடு.பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லலித்குமாரின் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டின் எல்லா விநியோகப்பகுதிகளிலும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்வது அவ்வாறு அமையாத பகுதிகளில் அவரே வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.

வேறு எந்தப்படமும் இல்லாமல் வாத்தி படம் மட்டும் வெளியாகவிருப்பதால் அது நல்ல வசூலைப் பெறும் என்று நம்பிக்கையாக இருந்தார்கள்.

அந்த நம்பிக்கைக்கு வேட்டுவைக்கும் வேலை இப்போது நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

அது என்ன?

கல்யாண்கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியாபவானிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அகிலன். இந்தப்படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன.

சரியான வெளியீட்டுத் தேதி இல்லாததால் அந்தப்படம் வெளியாகாமல் இருக்கிறதெனச் சொல்லப்பட்டது. இப்போது அப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்கிரீன்சீன் நிறுவனத்திடம் இப்படத்தை பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடுங்கள் என்று பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனம் வற்புறுத்திவருகிறதாம்.

எதனால் இப்படி? என்றால், வாத்தி படத்தின் விநியோக உரிமையை அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் கேட்டதாகவும் அதற்கு லலித்குமார் மறுப்பு தெரிவித்ததால் அந்தப்படத்துக்குப் போட்டியாக அகிலன் படத்தைக் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

அப்படி நடந்தால்? இதுவரை நல்ல பெயரைப் பெற்று வரும் அந்நிறுவனம் கெட்ட பெயரைப் பெறத் தொடங்கிவிடும் என்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்?

Related Posts