பறந்து போ – திரைப்பட விமர்சனம்

இறுதி இலக்கன்று பயணமே வாழ்க்கை என்பார்கள்.அதைத் தன் எல்லாப்படங்களிலும் ஏதோவொரு வகையில் வைத்துவிடும் இயக்குநர் ராம், இந்தப்படத்திலும் ஒரு பயணத்தில், வாழ்வின் இன்னொரு பக்கத்தை விரித்து அதை நாயகனும் பார்வையாளர்களும் உணரும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.
தம்மைவிட தம் குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்,வாழ்க்கை முழுதும் போராடினாலும் தன் குழந்தைகள் தம்மைப்போல் கஷ்டப்படாமல் வசதியாக வாழவேண்டும் என்கிற ஒற்றைநோக்கத்தில் ஏராள சாகசங்கள் செய்வார்கள்.அப்படிப்பட்ட தந்தையான மிர்ச்சிசிவா ஒரு கட்டத்தில் ம்கனின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்ப மாறுகிறார்.அது எப்படி? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறது பறந்துபோ.
நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவாவுக்குள் இப்படி ஒரு நடிப்பும் இருக்கிறது என்பது இந்தப் படம் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.அழுத்தமான ஆழமான விசயங்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இயல்பான மனிதனாக காட்டிக்கொள்ளும் முகபாவம் அவருடைய பலமாக இந்தப்படத்தில் அமைந்திருக்கிறது. மனைவி மகனுடனான காட்சிகளில் இரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் கிரேஸ் ஆண்டனி மலையாள வரவு.மகத்தான வரவு என்று பெயர் பெறக்கூடிய நடிப்பு.பெரும்பாலான குடும்பத் தலைவிகளின் பிரதிநிதியாக நடித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
சிவா – கிரேஸ் தம்பதியரின் மகனாக நடித்திருக்கும் மிதுல் ரியான் சிறப்பு.குறும்புத்தனம் கொப்பளிக்கும் அவனுடைய செயல்கள் மகிழ்ச்சியூட்டுகின்றன.
அஞ்சலியும் மலையாள நடிகர் அஜூ வர்கீஸும் ஆகிய இருவரும் சிறப்புத் தோற்றங்களில் வருகிறார்கள்.மொத்தப் படத்திலும் வந்தது போன்று நினைவில் பதிகிறார்கள்.
நாயகனின் மகனுடனான பயணத்தில் வரும் விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜஸ்வினி மற்றும் சில சிறுவர்கள் ஆகியோரும் தேவைக்கேற்ப நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் மிகவும் விரும்பும் கதைக்களம் இப்படத்தில் என்.கே.ஏகாம்பரத்துக்குக் கிடைத்திருக்கிறது.அதனால் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றி சிறந்த காட்சியனுபவங்களைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இதம்.யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை திரைக்கதையோடு இசைந்திருக்கிறது.
மதி.வி.எஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.எவ்விடத்திலும் சலிப்பு ஏற்பட்டுவிடாதபடி கவனமாகத் தொகுத்திருக்கிறார்.
குழந்தைகளின் பார்வையில் உலகத்தைப் பார்த்தால் நமக்கிருக்கும் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்கிற மிக ஆழமான கருத்தை அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம்.
– இளையவன்