தண்டகாரண்யம் – திரைப்பட விமர்சனம்
இராமாயணத்தில் இடம்பெற்றது தண்டகாரண்யம்.தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே அதன்பொருள்.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு உண்மையான தண்டனைக்குரியவர்கள் யார்? என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது படம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா ஆகியோரோடு வசித்து வருகிறார். கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராகப் பணியாற்றி வருகிறார். எப்படியாவது அரசு ஊழியராகி விட வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், உயர் அதிகாரிக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கலையரசனின் தற்காலிகப் பணியும் பறிபோகிறது.
இதனால் தம்பியை எப்படியாவது அரசுப் பணியில் சேர்த்துவிடத் துடிக்கும் தினேஷ், விவசாய நிலத்தை விற்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உருவாக்கிய சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைந்து பயிற்சி பெற தம்பியை அனுப்புகிறார்.
அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? அவற்றின் விளைவுகளென்ன? என்பதையும் நெஞ்சம் நடுங்குகிற அளவுக்குப் பதிவு செய்து பதைபதைக்க வைத்திருக்கிறது படம்.
பழங்குடியின இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார் தினேஷ்.அதிரடிக் காட்சிகளில் அசர வைத்திருக்கிறார்.ஒரு மிகப்பெரிய அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வகையிலான அழுத்தமான வசனங்கள் அவருடைய உச்சரிப்பில் மேலும் அழுத்தமாக ஒலிக்கின்றன.
கலையரசனின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் பார்ப்போரை படபடக்க வைத்திருக்கின்றன.
ரித்விகாவின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் இடம்கொடுத்திருக்கலாம்.
பாலசரவணன், சபீர், முத்துக்குமார், வின்சு ஆகியோரது நடிப்பும் நன்று.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வருகிற ஒப்பாரிப் பாடல் மனம் கனக்கச் செய்கிறது.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஓ ப்ரியா ப்ரியா, மனிதா மனிதா ஆகிய இளையராஜா பாடல்கள் கதைக்களத்துக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா உழைப்பில்,வனங்கள் கண்களில் நிறைகின்றன.வனமக்களின் வாழ்க்கை வலி கண்களைக் கண்ணீரால் நிறைக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை,திரையில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறார்.நாட்டில் நிஜத்தில் நிகழ்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தியதோடு கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தையும் கேள்வி கேட்டுத் தலைகுனிய வைத்திருக்கிறார்.
– இளையவன்











