சூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்
சின்னச் சின்ன தப்புகளைச் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் நாயகன் துருவாவும் அவரது மாமா ஷாராவும்.
அதன் தொடர்ச்சியாக நாயகி இந்துஜாவைக் கடத்திப் பணம் பறிக்க முயல்கிறார்கள்.
பணம் கேட்கப்போகும்போது இந்துஜாவின் அப்பா கொல்லப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து அது தொடர்பாகத் துப்புத்துலக்குகிறார் துருவா.
அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நாயகியைப் பார்த்ததும் காதல் கொள்வதால் இந்த வேண்டாத வேலையில் விரும்பி இறங்குகிறார்.
அப்போது பல எதிர்பாராத திருப்பங்கள். அவற்றை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
அலட்சியமாக அதேசமயம் அழுத்தமாக நடிக்க வேண்டிய வேடத்தை ஏற்றிருக்கும் நாயகன் துருவா, அதற்கு நியாயமாக நடந்துகொண்டிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோவுக்குரிய தகுதி எனக்கிருக்கிறது என்று காட்டியிருக்கிறார்.
நாயகி இந்துஜாவுக்கு முக்கியமான வேடம். நன்றாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் உணர்வுகளைக் கண்களிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் கூடவே வருகிற ஷாராவுக்கு ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பு. அவரும் அதை உணர்ந்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் ஆதித்யாஷிவ் மற்றும் ஸ்ரீனி ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
திவாகராதியாகராஜன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கதைக்கேற்ப பின்னணி இசையைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.
தளபதி ரத்னம், சுந்தர்ராம் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பொருத்தமாக இருக்கிறது.
படத்தொகுப்பாளர் முகன்வேலுக்கு நிறைய வேலை இருந்திருக்கும். முடிந்தவரை முயன்றிருக்கிறார்.
புதுஇயக்குநர் ஏகே, எடுத்துக் கொண்ட கதையை நேரடியாகச் சொல்லிவிடாமல் முன்பின் மாற்றிப் போட்டு வித்தியாசமாகச் செய்ய நினைத்திருக்கிறார். அது கொஞ்சம் அதிகமாகி பார்வையாளர்களைக் குழப்புகிறது.
வாத்தியார் பையன் மக்கு என்கிற பழமொழிக்கேற்ப இயக்குநர் வைத்திருக்கும் கதைத்திருப்பம் படத்துக்குப் பலம்.
முதல்பாதி முழுக்க முன்னுரையாகவே அமைந்திருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது.
புத்திசாலித்தனமான திரைக்கதையோட்டமும் அதிரடித் திருப்பங்களும் படத்தின் பெயருக்கேற்ப அமைந்திருக்கிறது.











