லவ்மேரேஜ் படத்தால் ஏராளமானோரின் அன்பு கிடைத்தது – விக்ரம்பிரபு நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு,சுஷ்மிதா பட்,மீனாட்சி தினேஷ்,அருள்தாஸ்,ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – இரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.ஜூலை 3 அன்று நடந்த இவ்விழாவில் படக்குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் முருகானந்தம் பேசுகையில்….
இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும், அதற்குக் காரணமாக திகழ்ந்த ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட நாட்கள் கழித்து நான் நடித்த இந்தப்படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படி என்னுடைய உறவினர்களிடம் சொன்னேன். அவர்களும் படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக நல்லதொரு படத்தில் நடித்திருக்கிறீர்கள் எனப் பாராட்டினார்கள். இதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தில் மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் ஐயா செய்திருந்த மேஜிக் என்னை பிரமிக்க வைத்தது.
இந்தப்படத்தில் அருள்தாஸும், நானும் நடித்திருக்கும் காட்சிகளுக்கு இரசிகர்களின் வரவேற்பினைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்தப்படத்தில் விக்ரம் பிரபு மொட்டை மாடியில் இருந்து ஒரு வசனம் பேசுவார்.’கடைசியில் இரண்டு பக்கமும் பாதிக்கப்பட்டது நான்தான்..’ என்று பேசும்போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது.ஆக்ஷனும், மென்மையும் கலந்த அவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினர்.
பெரியபடம் ஓடும்… சின்னப்படம் ஓடாது… என்ற கருத்து வேறுபாடுகள் இருக்கும் தருணத்தில் நல்லபடம் ஓடும் என்று நிரூபித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில்…..
அண்மையில் இப்படக்குழுவினருடன் மதுரைக்குப் பயணித்த போது தான் நடிகர் அருள்தாஸின் நெருக்கமான நட்பு கிடைத்தது. அற்புதமான மனிதர்.அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைப் பார்த்து அவரைப் பற்றி தவறாக நினைத்து இருந்தேன்.அவருடன் பழகும் போதுதான் அவருடைய மற்றொரு முகம் தெரிந்தது.
இயக்குநர் சண்முகபிரியன் தன்மையான ஆத்மார்த்தமான படைப்பாளி. இந்தப்படத்தின் மூலம் ஷான்ரோல்டன் என்ற கலைஞன் அவருக்கு நண்பனாக கிடைத்திருக்கிறார்.திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தபோது ஷான்ரோல்டனைப் பற்றி இயக்குநர் விவரித்த தருணங்கள் மறக்க முடியாதவை.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டனுடன் இணைந்து இந்த ஆண்டு விகடன் விருதினை பெற்றதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.இன்னும் அவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
விக்ரம்பிரபு உடன் நான் பணியாற்றும் மூன்றாவது படம் இது.இந்தப் படத்தில் அவர் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். உங்களுடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன். விக்ரம்பிரபு உடன் இணைந்து பணியாற்றுவதை என் தந்தையார் உயிருடன் இருந்திருந்தால் மனதாரப் பாராட்டிருப்பார். தற்போது அவருடைய ஆத்மா என்னைப் பாராட்டும் என நம்புகிறேன்.
இந்தப்படத்தில் நான் பணியாற்றுவதற்கு தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் முதன்மையான காரணம். இந்தப்படத்தின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை மீனாட்சி தினேஷ் பேசுகையில்….
நீண்ட நாட்களாக தமிழில் நல்லதொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தேன். இந்தப்படத்தில் ராதா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் நன்றி.இந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து மகிழ்ச்சியுடன் நடித்தேன். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் மறக்க முடியாததாக இருந்தது.இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இசை என் கதாபாத்திரத்தை மேம்படுத்துவது போல் இருந்தது.விக்ரம்பிரபு மற்றும் சுஷ்மிதாபட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்கமுடியாதது. இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில்….
இந்தப்படம் வெளியான பிறகு நிறைய திரையரங்குகளுக்கு நேரில் சென்ற போது இரசிகர்களின் வரவேற்பு எங்களை சந்தோஷப்படுத்தியது.படம் பார்த்த இரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குடும்பத்தினருடன் அனைவரும் சந்தோஷமாக பொழுதைக் கழித்தோம் என்று உற்சாகத்துடன் சொன்னார்கள். அத்துடன் நீங்கள் காட்டியது போல் எங்களுடைய குடும்பத்திலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள் என்று உரிமையுடன் குறிப்பிட்டார்கள்.
நான் நடித்திருந்த அம்பிகா கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு அளிப்பார்கள்? என்று பதற்றத்துடன் இருந்தேன்.ஆனால் இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார்.அதற்கான வரவேற்பும் நான் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக இருந்தது. இதற்காகவும், என் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்ததற்காகவும் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படத்தில் எனக்குத் தங்கையாக நடித்திருந்த நடிகை மீனாட்சி தினேஷ் அற்புதமாக நடித்திருந்தார்.
இந்தப்படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம் பிரபுவிற்கு ஏராளமான பெண் இரசிகைகள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு ஷான்ரோல்டனின் இசையும் ஒரு காரணம்.அத்துடன் இந்தப்படத்தின் பாடலுக்கான வரிகளைக் கேட்கும்போது புரிந்து இரசித்தனர். இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கும்,உழைத்த படக்குழுவினருக்கும், வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்…..
இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும்,இரசிகர்களுக்கும் நன்றி. இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நண்பன் சண்முகப்பிரியன் முதல்முதலாக ‘லவ் மேரேஜ்’ படத்தை இயக்குகிறார்.அந்தப்படத்தை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். இதற்காக படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்தார்கள்.பஸ், ரயில், பஸ் ஸ்டாண்ட் என இந்தப்படத்தை எங்கெங்கு விளம்பரப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் விளம்பரப்படுத்தி இரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர்.
சின்னப் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்ற சூழலில் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலனின் ஆதரவு இருந்ததால் இந்தப்படம் நிறைய திரையரங்குகளில் திரையிட முடிந்தது. இந்தப்படத்தை அவர்களால் எந்த அளவிற்கு பெரிய அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட முடியுமோ.. அந்த அளவிற்கு வெளியிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். அதற்காக அவருக்கு இயக்குநர் சார்பாகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தில் இயக்குநர் சண்முகப்பிரியனுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் சண்முகப்பிரியனின் வெற்றியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அவர் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
விநியோகஸ்தர் – தயாரிப்பாளர் சக்திவேலன் பேசுகையில்….
இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும்,படக்குழுவினருக்கும் விநியோக நிறுவனம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பு நிறுவனத்தினர்…படக் குழுவினர்.. என அனைவரும் பட வெளியீட்டுக்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.இவர்கள் அனைவருக்கும் சினிமா நன்றாக தெரிந்திருப்பதால்..அவர்களுடைய திரைப்படத்தை சரியான முறையில் விளம்பரப்படுத்தி இரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர்.
ஒரு படம் உருவான பிறகு அந்தப்படம் வெளியிடும் போதும்.. வெளியீட்டிற்குப் பின்னரும் அதனை விளம்பரப்படுத்துவதற்கு ஏராளமான எனர்ஜி தேவை.அதை இந்தக் குழுவிடம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இயக்குநர் சண்முகப்பிரியன் அவருடைய முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறார் அவர் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார்.அதற்கான முழுமையான முன் தயாரிப்புடன் அவர் களமிறங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ததில் ஊடகத்தினருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.அவர்கள் இந்தப்படத்தை இரசிகர்களிடம் சேர்ப்பித்த காரணத்தினால் தான் நாங்கள் எதிர்பார்த்த இரசிகர்களை விட கல்லூரி மாணவர்களும், குடும்பத்தினரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை வெற்றி பெறச் செய்தனர்.இதற்காக ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘பராசக்தி’, ‘பருத்தி வீரன்’ ‘கும்கி’ போன்ற படங்களில் அறிமுகமான நடிகர்களுக்குத் தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என திரையுலகினர் சொல்வார்கள்.அந்த வகையில் கலை உலகில் மூன்றாம் தலைமுறை சார்ந்த இந்தப் படத்தின் நாயகனான விக்ரம் பிரபுவுக்கு இந்தப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.அவருக்கும் என்னுடைய நன்றிகள் என்றார்.
இயக்குநர் சண்முகப்பிரியன் பேசுகையில்…..
இந்தப்படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும்,இரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி.இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும்,அன்பும் எனக்குக் குழந்தை பிறந்தபோது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம்.
முதல்படமாக குடும்பப்படத்தை இயக்கவேண்டும் என்று தீர்மானித்த போது இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்தேன்.அக்காவை கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் தங்கச்சியை திருமணம் செய்து கொள்கிறார்.இதைக்கேட்கும்போது கொஞ்சம் கொச்சையாக இருக்கும்.பெண்களை எப்போதும் அழகாகத்தான் காட்சிப்படுத்தவேண்டும் என என்னுடைய இயக்குநர் ரா.கார்த்திக் சொல்லிக்கொண்டே இருப்பார்.இந்தக்கதையில் பெண்ணை இன்னும் அழகாகக் காட்சிப்படுத்தலாம் என்று அவர்தான் சொன்னார்.அதற்குப் பிறகுதான் இப்படத்தின் திரைக்கதை முழுமையானது.இந்தக் கதையை எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட என் ஹீரோ விக்ரம்பிரபுவிற்கு முதல் நன்றி.
படத்திற்கு இசையமைத்த ஷான்ரோல்டன் கொடுத்த ஆதரவு எல்லையற்றது.அவருக்கும் என் நன்றி.
நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான திரையரங்குகளில் வெளியிட்டதற்காக விநியோகதஸ்தர் சக்திவேலனுக்கும் நன்றி.
படத்தின் பணிகள் நடைபெறும் போது தயாரிப்பாளரும்,தொழில்நுட்பக் கலைஞர்களும்,நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான ஒத்துழைப்பை வழங்கினர்.படம் வெளியான பிறகு ஊடகத்தினரும்,இரசிகர்களும் பேராதரவு அளித்து வருகிறார்கள்.இதைப்பார்க்கும் போது எனக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது.இதற்காக நான் இறைவனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படத்திற்காக நடிகை சுஷ்மிதாவிடம் பேசும்போது படத்தின் முதல்பாதியில் நீங்கள்தான் ஹீரோயின்.அதன்பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் போதும் உங்களுடைய பங்களிப்பு தேவை என்று சொன்னேன்.
அதன் பிறகு மீனாட்சியிடம் பேசும்போது நீங்கள் இரண்டாம் பாதியில் இருப்பீர்கள்.படத்தினை விளம்பரப்படுத்தும்போது நீங்கள் இடம் பெற மாட்டீர்கள் என்று சொன்னேன்.
முதலில் தயக்கம் காட்டினார்கள்.அதன்பிறகு என் மீது நம்பிக்கை வைத்து நடித்தார்கள்.அதற்காக இருவருக்கும் நன்றி.
இந்தப்படத்தை நடிகர் பிரபு பார்த்துவிட்டு, விக்ரமை நன்றாக நடிக்க வைத்திருக்கிறாய் என்று பாராட்டினார்.இது எனக்கு கிடைத்த சிறந்த பாராட்டாகவே கருதுகிறேன்.
இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் நண்பன் யுவராஜுக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில்…..
இயக்குநர் சண்முகப்பிரியன் எனது சிறந்த நண்பர் ஆகிவிட்டார்.அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சற்றுக் கூடுதலாக இந்தப் படத்தில் உழைத்தோம்.வெற்றி பெறுவதற்கான எல்லா அடையாளங்களும் இயக்குநரிடத்தில் இருக்கிறது.இன்னும் அவர் பெரிய வெற்றிகளைத் தொடுவார். வர்த்தக ரீதியிலான திரைப்படங்களிலும் அவர் கொடிகட்டிப் பறப்பார் என்று சொல்லலாம்.
இதுபோன்ற கதையைத் தேர்ந்தெடுத்து அதனை முதல்படமாக இயக்குவது சவாலானது.கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் இப்படத்தின் கதையை அவர் நேர்த்தியாகச் சொல்லியிருந்தார்.திருமண விசயத்தில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்டு அதனை நல்ல கதாபாத்திரத்தின் மூலமாகவும், அதற்குப் பொருத்தமான நட்சத்திர முகங்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார்.
இப்படத்தில் நடித்த நடிகர்களில் அருள்தாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவருக்காகவே பிரத்யேகமாக பின்னணி இசையமைத்தேன். அந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானதாக இருக்கும்.ஒரேமாதிரியான உணர்வை சிறிய சிறிய வேறுபாட்டுடன் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.
எனக்கும் பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் இடையேயான உறவு கலாபூர்வமானது.இந்த உறவு தொடரும்.தமிழ் இரசிகர்களுக்காக கேளிக்கையான பாடல்களை மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கான பாடலையும் நாங்கள் இணைந்து வழங்குவோம் என உறுதி கூறுகிறேன்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், இயக்குநர் சண்முகப்பிரியனுக்கும் இடையேயான நட்பைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
விக்ரம்பிரபு இது போன்ற யதார்த்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்திருப்பதைப் பாராட்டுகிறேன் என்றார்.
விக்ரம் பிரபு பேசுகையில்….
இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது.இப்படம் வெளியான பிறகு திரையரங்கத்திற்குச் சென்று இரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு இப்படக்குழு மூலம் கிடைத்தது.நீண்டநாள் கழித்து மதுரைக்குச் சென்றிருந்தேன்.பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன்.ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரையில் உள்ள திரையரங்கத்திற்குச் சென்று இரசிகர்களைச் சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாக திரையரங்கத்திற்குச் சென்றபோது மிகப்பெரும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது.இந்தப்படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து இரசித்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.இரசிகர்கள் இந்தப் படக்குழு மீது காட்டிய அன்பிற்கும் இந்தப் படத்தின் மீது ஊடகத்தினர் காட்டிய அன்பிற்கும் நன்றி.
நான் ஷான்ரோல்டனின் இரசிகன்.இந்தப்படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது.இந்தப்படத்தின் மூலம் நல்லதொரு ஆல்பத்தை கொடுத்து இருக்கிறீர்கள்.
இந்தப்படத்திற்கு ஹீரோயின்ஸ் இருவரும் இரண்டு பில்லர்கள்.அற்புதமாக நடித்திருந்தனர்.இந்தப்படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.
இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறாய் எனப் பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம்.இந்தப் படத்தை திரையுலகினர் பலரும் பார்த்து இரசித்து என்னைப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பைச் சம்பாதித்து இருக்கிறேன்.
‘இறுகப்பற்று’ படத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்ததாக இயக்குநர் சொன்னார்.அதற்காக அவருக்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகுதான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர்.அதையெல்லாம் உடைத்து இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுடன் இணைந்து வெளியான அனைத்துப்படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.ஏனெனில் இது என்னுடைய துறை.சேர்ந்து ஓடினால் நன்றாக இருக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.