பரமசிவன் ஃபாத்திமா – திரைப்பட விமர்சனம்

மதமாற்றம் தொடர்பாக நாட்டில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றிப் பேசுகிற படமாக வந்திருக்கிறது பரமசிவன் பாத்திமா.திண்டுக்கல்லில் உள்ள மலை கிராமம் மதமாற்றச் சிக்கல்களால் இரண்டாகப் பிரிகிறது.இதற்கிடையே இக்கிராமங்களில் கொலைகள் நடக்கின்றன.அவை எதற்காக? அதைச் செய்பவர் எவர்? அதற்கான காரணம் என்ன? என்பனவற்றிற்கான விடைகள்தாம் படம்.
கதாநாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதைநாயகனாக இருக்கவேண்டுமென நினைத்து நடித்திருக்கிறார் விமல்.அவருடைய எதார்த்த நடிப்பு அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவி நன்றாக இருக்கிறார்.கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், காவலராக வரும் காதல் சுகுமார்,முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கலையரசன், கூல் சுரேஷ் ஆகியோர், கிறித்துவமத பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கர், சாமியாராக நடித்திருக்கும் அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் பாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்றிருக்கும் மைனா சுகுமார் இந்தப்படத்தில் நடிகராகக் களமிறங்கியிருக்கிறார்.அதுவும் வில்லன் வேடம்.அதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
தீபன்சக்ரவர்த்தி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாழ்வில்லை.
மைனா சுகுமார் ஒளிப்பதிவில் கிராமத்து அழகுகள் கண்களில் நிறைகின்றன.கழுகுப் பார்வைக் காட்சிகளில் கதை சொல்லவும் செய்திருக்கிறார்.
படத்தொகுப்பு செய்திருக்கும் புவன், சுகுமாரின் காட்சியழகுகளை மீறி வசனங்களால் நிரம்பிவழிகிறது படம் என்கிற எண்ணத்தை மாற்றும் வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் இசக்கி கார்வண்ணன். மதமாற்றச் சிக்கலில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கிறார்.முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் இல்லாதது பெரும் குறை.
– இளையவன்