சினிமா செய்திகள்

இழுத்தடித்த விஷால் விடாமல் போராடிய லைகா – 45 கோடி கட்ட உத்தரவிட்ட நீதிமன்றம்

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா இன்று (ஜூன் 5) தீர்ப்பளித்தார். லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பு வழங்க வேண்டும். வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க விஷால் தரப்பு வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்த வழக்கு விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார் விஷால் என்று சொல்லப்பட்டது.அதேசமயம் லைகா நிறுவனமும் விடாமல் இவ்வழக்கை உயிர்ப்பித்துக் கொண்டேயிருந்தது.இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.

இப்போது 30 விழுக்காடு வட்டி என்று கணக்குப் போட்டால் இத்தொகைக்கு மாதம் சுமார் 51 இலட்சம் வருகிறது. நான்காண்டுகளுக்குச் சேர்த்துப் பார்த்தால் சுமார் இருபத்துநான்கு கோடிக்கு மேல் செலுத்த வேண்டிவரும்.இது மட்டுமின்றி லைகா நிறுவனம் செய்த வழக்குச் செலவுத் தொகையையும் விஷாலே ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.அதுவும் சில கோடிகள் வரை வரலாம் என்று சொல்லப்படுகிறது.

இப்போது விஷால் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பணத்தைக் கொடுக்கப் போகிறாரா? அல்லது தீர்ப்பை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்யப்போகிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts