விஷால் வெளியிடும் படம் மூலம் ரஜினி பிரபாஸ் வரிசையில் சேரும் யாஷ்

ரூ.25 லட்சத்துக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது உயர் பட்ஜெட் படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடுவது போல் கன்னடப் படங்களின் தரம், உள்ளடக்கம் ஆகியவை கர்நாடகாவையும் கடந்து வரவேற்படைகின்றன என்று கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத்தின் தலைவர் சின்னே கவுடா அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில், கன்னடத் திரையுலகின் முன்னணி நாயகன் யாஷ் நடிக்கும் கேஜிஎப் படம் ஐம்பது கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கிறது.
கோலார் தங்க வயல் (Kolar Gold Field) என்பதன் சுருக்கம் தான் கேஜிஎப்.
ஏற்கெனவே உக்கிரம் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இரண்டாவது படம்.
இந்தப்படத்தில் நாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். அவருக்கு இதுதான் முதல்படம்.
புவன்கெளடா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிபஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
இயக்குநர் பிரஷாந்த் நீல், படம் பற்றிக் கூறும்போது, கேஜிஎப் நிழலுலகம் பற்றிய கதை. 70 களில் நடைபெறும் ஒரு கதைக்களமாகும். இது மிக நீளமான படம் என்பதால் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது என்கிறார்.
இது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த படம். நாயகன் யாஷ் இந்தப்படத்துக்காக 700 நாட்கள் ஒதுக்கியிருக்கிறார். ஒரு படத்துக்கு நூறு நாட்கள் என்று கணக்குப் போட்டால் அவர் ஏழு படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப்படத்தின் கதை மற்றும் அது பிரமாணடமாக எடுக்கப்படுவதால் இதற்காக இரண்டாண்டுகள் உழைத்திருக்கிறார்.
விஜய்கிரகந்தூர் தயாரித்திருக்கும் இந்தப்படம் பெரும்பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட முதல் கன்னடப்படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது.
ஒரு கன்னடப்படம் இந்தியப்படமாக உருமாறுவதும் இதுவே முதன்முறை.
ஆம், இந்தப்படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரேநாளில் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் தயாராகி இந்தியா முழுதும் வெற்றி பெற்ற பாகுபலி 2, தமிழில் தயாராகி இந்தியா முழுதும் வெளியாகவிருக்கும் 2 ஓ ஆகிய படங்களின் வரிசையில் இந்தப்படமும் சேருகிறது.
தமிழில் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை விஷால் பெற்றிருக்கிறார்.
கன்னடத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகியிருக்கும் இந்தியன்சினிமா இது. இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன் என்கிறார் விஷால்.
இப்படம் வெளியானால், தங்கள் மொழியில் மட்டுமின்றி தென்னிந்தியா மட்டுமின்றி இந்திப்படம் மூலம் வட இந்தியாவிலும் புகழ்பெற்றிருக்கும் ரஜினிகாந்த், பிரபாஸ் ஆகியோர் போல் நாயகன் யாஷ் புகழ்பெறுவார் என்றும், பிரமாண்ட இயக்குநர்கள் ஷங்கர், ராஜமெளலி ஆகியோர் வரிசையில் இயக்குநர் பிரஷாந்த் நீல் சேருவார் என்றும் சொல்கின்றனர்.
இந்தப்படம் தமிழ்,கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.