கென்னடி கிளப் – திரைப்பட விமர்சனம்

கபடி போட்டியின் பெருமைகளைச் சொல்லும் இன்னொரு படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.. இம்முறை பெண்கள் கபடி.
ஓய்வுபெற்ற இராணுவவீரர் பாரதிராஜா. அவருக்குக் கபடி போட்டியில் தீவிர ஈடுபாடு. அதனால் எல்லோருக்கும் கபடி கற்றுக்கொடுக்கிறார். அவரிடம் பயின்ற சசிகுமார் உட்பட பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கிராமத்துப் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் கபடி குழு அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அக்குழு இந்திய அளவிலான போட்டிகளில் விளையாடப்போவதும் அப்போது நடக்கும் அரசியலும்தாம் படம்.
பாரதிராஜா நடிப்பு சிறப்பு. பெண்கள் வெற்றி பெறும் நேரத்தில் துள்ளிக்குதிப்பது, அவர்களுக்கு கஷ்டம் எனும்போது கலங்கி நிற்பது, சசிகுமாருடன் கருத்துமாறுபாடு வரும்போது சீறுவது ஆகிய எல்லா இடங்களிலும் நன்றாக நடித்து வரவேற்பு பெறுகிறார்.
ஆனால் அவரைச் சிறுமைப் படுத்தும் விதமாக அவருடைய வேடத்தைச் சித்தரிப்பது பொருத்தமாக இல்லை. சசிகுமார் மீதான அவருடைய சந்தேகம் அபத்தம். அவ்வளவு அனுபவம் வாய்ந்தவர் இப்படி முடிவெடுப்பார் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
சசிகுமார் அளவெடுத்துத் தைத்த சட்டை போல பயிற்சியாளர் வேடத்துக்குப் பொருந்துகிறார். பாரதிராஜாவோடு கருத்து மாறுபாடு வரும் காட்சிகளில் அதை எதிர்கொள்ளும் விதம் கம்பீரம்.
நிஜமாகவே கபடி விளையாடும் பெண்கள் படத்திலும் விளையாடியிருக்கிறார்கள். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்.
இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கபடி கபடி பாடல் அருமை.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதையின் தன்மையை விளக்கிச் செல்கின்றன.
சூரி வரும் காட்சி, கபடி வீராங்கனையின் திருமணநாள் நிகழ்வுகள் ஆகியன சிரிக்கும்படி இருக்கின்றன.
எதிர்பார்த்தபடியே அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருப்பது பலவீனம். விளையாட்டு என்பது உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் என்பதை விட விளையாடினால் அரசாங்க வேலை கிடைக்கும் என்கிற கருத்தை அழுத்தமாகச் சொல்கிறார் சுசீந்திரன். இது சரியா?