விமர்சனம்

காட்டுப்பய சார் இந்தக் காளி – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் பொருளாதாரம் தமிழரல்லாதவர்கள் கைகளில் சிக்கியிருப்பதால் தமிழ் மக்கள் எவ்வளவு பாதிப்புகளுக்காளாகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படம் காட்டுப்பய சார் இந்தக் காளி.

கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டுகிறார் இயக்குநர் யுரேகா.

ஒரு மார்வாரி ஃபைனான்சியரிடம் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் திடீரென் தீப்பற்றி எரிகின்றன.

ஒரு சைக்கோ வாகனங்களை எரிப்பதாகக் காவல்துறைக்குத் தெரியவருகிறது.

அந்த சைக்கோ யார்? எதற்காக வாகனங்களை எரிக்கிறார்? சைக்கோவை காவல்துறை கண்டுபிடித்ததா? ஆகிய கேள்விகளுக்கான விடைதான் படம்.

சைக்கோவைக் கண்டுபிடிக்கும் காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நாயகன் ஜெய்வந்த். முறுக்கு மீசையுடன் கம்பீரமாக நடந்து வேடத்துக்குப் பெருமை சேர்க்கிறார். மாறுபட்ட இரண்டு குணாதிசயங்களை உடல்மொழியில் வேறுபடுத்திக் காட்டுவது நன்று.

குறும்புக்கார பெண்ணாக வரும் நாயகி ஐரா நல்வரவு. உண்மையில் அவர் யாரெனத் தெரியும்போது வியப்பு.

மார்வாரி ஃபைனான்சியராக நடித்திருக்கும் சி.வி.குமார், காவல் ஆணையராக வரும் ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், அபிஷேக், யோகி தேவராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

விஜய்சங்கர் இசையில், லைட்டுங்கோ, சிவசம்போ உட்பட பாடல்கள் கேட்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

படத்தில் எல்லோரும் அளவுக்கதிகமாகச் சத்தம் போடுவதும், காவல்துறை விசாரணை நகராமல் அப்படியே இருப்பதும் பின்னடைவு.

ஆழமான கருத்தை மையமாக வைத்து வெகுமக்களுக்கான படம் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் யுரேகா.

நல்ல முயற்சி.

திரைஊடகம் காட்சி வடிவிலானது, சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன என்கிற இயக்குநரின் ஆவேசத் தவிப்பு எல்லாவற்றையும் வசனங்களில் வெளிப்படுத்துகிறது. இதைத் தவிர்ப்பது நல்லது.

Related Posts