விமர்சனம்

கடிகார மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

சென்னை மாநகரில், நடுத்தர வர்க்கத்தினர் வாடகைக்கு விடு பிடிப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம்.

நள்ளிரவில் திடீரென வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம், வீட்டுச் சொந்தக்காரர் வெளியில் தூக்கிப் போட்டுவிட, அவறையெல்லாம் வாடகை வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டு அதிலேயே போய் வீடு தேடுகிறது கிஷோர், லதாராவ் மற்றும் மூண்ரு குழந்தைகள் கொண்ட குடும்பம்.

அங்கிருந்து தொடங்கும் படம் நெடுக நம்மைக் கலங்க வைப்பதாகவே இருக்கிறது.

நான்குபேர் என்று சொல்லி வீடு பிடித்த பின்பு ஐந்தாவதாக இருக்கும் சின்ன மகனை மறைத்து மறைத்து அழைத்துச் செல்லும் கிஷோரின் வாழ்க்கை, கிராமத்திலிருந்து சென்னை வந்து கஷ்டப்படும் எல்லோரையும் பிரதிநிதித்துவம் செய்கிற மாதிரி இருக்கிறது.

கிஷோர் அச்சு அசலாக அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்திப்போகிறார். அவர் கஷ்டப்படும்போதெல்லாம் நம் கண்கலங்கும்.

அவருடைய மனைவியாக வருகிற லதாராவ் பொருத்தம். அவர் பூக்கட்டி விற்று கணவரின் கஷ்டத்தைப் பங்கு போட்டுக்கொள்கிறார் என்பதை திரைக்கதை ஓட்டத்திலேயே சொல்லியிருப்பது நன்று.

திருமணமாகாத இளைஞர் கருணாகரன், எப்படி பொய் சொல்லி வீடு பிடிக்கிறார் என்பதும், எதற்காக அந்த வீட்டைப் பிடிக்கிறார் என்பதும் சுவாரசியமான காட்சிகள்.

வீட்டுச் சொந்தக்காரராக நடித்திருக்கும் பாலாசிங் அவர் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் பாட்டியும் சிறப்பாக நடித்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்கள்.

நான்கு வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு விட்டால் நாட்டுக்கே ராஜாவாகிவிட்டதாக நினைத்து ஆட்டம் போடும் சிலரை பாலாசிங் தன் நடிப்பால் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

பாலாசிங் மகளின் காதல், கருணாகரனுக்கும் அவர் பாட்டிக்குமான உறவு, கழிவறைக்குச் செல்ல மக்கள் படும்பாடு போன்றவை படத்துக்கு வலுச் சேர்க்கும் சுவாரசியங்கள்.

படம் முடிந்து வருகிற போது வாடகை வீட்டில் வசிக்கிறவர்கள், எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்றும், வாடகைக்கு விட்டிருப்பவர்கள், இனிமேல் குடித்தனக்காரர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இறுதியில் நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சியில் மனம் கனக்கிறது. சொந்தமான புது வீட்டுக்குள் கிஷோரின் குடும்பம் மகிழ்ச்சியாகக் குடியேறுகிறது என்று வைத்திருக்கலாமே என்று இயக்குநரின் மேல் கோபம் கொள்ள வைக்கிறது.

வாடகை வீட்டுக்காரர்களின் வலியை கலை வடிவில் கொடுக்க முனைந்த இயக்குநர் வைகறை பாலனுக்கு இதுவே வெற்றி.

Related Posts