கமலுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? – விஷாலிடம் கேட்கும் நடிகர்
ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காகவும், திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழு அமைத்திருக்கிறது.
தங்கள் படத்தை வெளியிடச் சாத்தியமுள்ள தேதிகளை அக்குழுவிடம் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவேண்டும். அதன்பின், அந்தத் தேதியில் வேறு படங்கள் வருகின்றனவா? என்பதை ஆய்ந்து தயாரிப்பாளர் கொடுத்த தேதியில் வெளியிடலாமா? அல்லது தள்ளி வைக்க வேண்டுமா? என்பதை அக்குழு முடிவு செய்யும்.
அக்குழு அமைத்த போது,கொடுக்கப்பட்ட வாக்குறுதி, ஒரு வாரத்துக்கு நான்கு படங்களுக்கு மேல் வெளியிட அனுமதி இல்லை என்பது.
ஆனால் இன்று (ஆகஸ்ட் 3,2018 ) ஒன்பது திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த ஒன்பது படங்களில் ஒன்றான காட்டுப்பய சார் இந்தக்காளி திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் நடிகர் ஜெய்வந்த், இது தொடர்பாகக் கூறியதாவது….
நாங்கள் சில மாதங்கள் முன்பாகவே இந்தத் தேதியில் படத்தை வெளியிடுகிறோம் என்று கடிதம் கொடுத்து அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறோம்.
ஆனால், இன்று ஒன்பது படங்கள் வெளியாகின்றன. இதனால் எங்கள் படம் மட்டுமல்ல எல்லா சின்ன படங்களுக்குமே திரையரங்குகள் கிடைக்கவில்லை. நல்ல அரங்குகள் கிடைக்காமல் தவிக்கிறோம்.
எங்களுக்கு இந்த நிலை, அதேசமயம் அடுத்த கமலின் விஸ்வரூபம் 2 வெளியாகவிருக்கிறது.
அந்தத் தேதியில் இன்னும் ஒருபடம் வெளியாவதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியானால் நாங்கள் மட்டும் பாதிக்கப்பட வேண்டுமா? படங்களை வெளியிடும் தேதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை யாரும் கொடுக்காமல் நீங்களே எடுத்துக்கொண்டீர்கள். அதை முறையாகச் செய்யவேண்டாமா?
விஸ்வரூபம் 2 வரும்போது ஒருமுறை நடைமுறை எங்களுக்கு வேறு நடைமுறையா? விஷால் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறார்? கமலுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? என்று கொதிக்கிறார் ஜெய்வந்த்.











