சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையும் படம் – விவரம்

இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவந்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பயணித்தது ஏன்? என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது.

அதற்கான விடை….

வணங்கான் படத்துக்குப் பிறகு புதுமுக கதாநாயகனை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் பாலா இருக்கிறார்.அதற்கான திரைக்கதை உருவாக்கத்துக்காக இதற்கு முன்பே திருவண்ணாமலையில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கியிருந்தார் என்று சொல்லப்பட்டது.

பாலா இயக்கும் அந்தப் புதியபடத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் (சனவரி 2026) தொடங்கும் என்று சொன்னார்கள்.இப்போது, அது தள்ளிப்போய் ஏப்ரல் மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

அது ஒருபுறமிருக்க, பாலா ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்ப்டத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கான கதை,திரைக்கதை எல்லாம் தயாராகி நடிகர்கள் தேர்வும் நடந்திருக்கிறதாம். கதாநாயகனை மையப்படுத்திய கதையாக இல்லாமல் கதையே கதாநாயகன் என்றும் அக்கதைக்குத் தேவையான நடிகர்களை வைத்து அப்படம் உருவாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

அந்தப்படம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் ஆகியன நடந்து கொண்டிருக்கின்றனவாம். அவற்றிற்கிடையே தான் திருவண்ணாமலை கோயில் பயணம் நடந்திருக்கிறது.

இந்தப்படத்தின் பின்னணியில் ஜீ நிறுவனம் இருக்கிறதாம்.அந்நிறுவனம் இந்தப் படத்துக்கான தொகையை முதலீடு செய்கிறதாம். முதல்பிரதி அடிப்படையில் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பி ஸ்டுடியோஸ் நிறுவனம், சூர்யா நடித்த மாயாவி,மிஷ்கின் இயக்கிய பிசாசு,சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த சண்டிவீரன்,ஜோதிகா நடித்த நாச்சியார், ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன் ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறது.கடந்த ஆண்டு வெளியான வணங்கான் படத்திலும் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏற்கெனவே தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை, ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கவிருக்கும் இந்தப்படம் அதன் கதை வலிமை காரணமாக பெரிதாகப் பேசப்படும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென்றும் வந்தவுடன் உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என்கிறார்கள்.

Related Posts