September 12, 2026
விமர்சனம்

800 – திரைப்பட விமர்சனம்

இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர்,அந்தவிளையாட்டில் எண்ணூறு பேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனையாளர் முத்தையாமுரளிதரன்.அவருடைய வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 800.

முத்தையாமுரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் இந்திநடிகர் மதுரமிட்டல், தோற்றத்திலும் அவரை ஒத்திருக்கிறார்.நடிப்பிலும் நிஜ வீரர் போலவே தெரிகிறார். விளையாட்டு மட்டுமின்றி குடும்பம் மற்றும் உறவுகளுடனான காட்சிகளிலும் குறைவைக்கவில்லை.

அவருடைய மனைவி மதிமலர் வேடத்தில் நடித்திருக்கும் மகிமாநம்பியாருக்கு அதிகவேலையில்லை. வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.

இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனரணதுங்கா வேடத்தில் நடித்திருக்கும் கிங்ரத்னம், அப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, அம்மாவாக நடித்திருக்கும் ஜானிகிசுரேஷ், பாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசி ஆகியோரும் அளவாக நடித்து பலமாக இருக்கிறார்கள்.

கதைசொல்லும் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் நாசர். அவருடைய நடிப்பனுவம் இந்தப்படத்துக்கு உதவியாக அமைந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கிறார் நரேன். அவர் பேசும் கருத்துகளுக்கு அரங்கில் ஆரவார வரவேற்பு.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை பொருத்தம்.

விளையாட்டு வீரரின் வாழ்க்கைக் கதை என்றாலும், கதை நடக்கும் களம் இலங்கை என்பதால் அங்கு நடந்த விடுதலைப்போராட்டம், தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியும் விளையாட்டுக் காட்சிகளை அதன் விறுவிறுப்புக் குறையாமல் காட்டியும், தான், ஒரு கைதேர்ந்த ஒளிப்பதிவு இயக்குநர் என்று நிறுவியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.அவருடைய உழைப்பில் படத்தின் தரம் உயர்ந்துள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ஸ்ரீபதி, முத்தையாமுரளிதரனின் வாழ்க்கைக் கதையை அப்படியே சொல்லிவிட வேண்டும் என்று முனைப்புக் காட்டியிருக்கிறார்.முத்தையா பந்துவீசும் முறையில் பிழை என்கிற சர்ச்சை குறித்த விவரணை போதவில்லை.

மலையகத்தமிழரான அவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்துக் கொண்டிருந்த கருத்துகள் தமிழினத்துக்கு எதிரானவை என்பதையும் மறைக்காமல் பதிவு செய்திருக்கிறார்கள்.

– செல்வன்

Related Posts