காடப்புறா கலைக்குழு – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்கள் வருகையால் கிராமிய நடனக்கலைகள் பாதிப்புக்கு ஆளாகின, அதே சமயம் அக்கிராமிய நடனக்கலைகள் மற்றும் கலைஞர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் காடப்புறா கலைக்குழு.
இந்தப் பெயரில் கலைக்குழு நடத்தி வருகிறார் முனீஷ்காந்த். தம் குழுவினரைக் குடும்பம்போல் பாவிக்கிறார். ஒரு கலைக்குழு இருந்தால் போட்டிக் குழுக்களும் இருக்கவேண்டுமே? இருக்கிறது. ஆனால், கதை அப்படிப் போகவில்லை. இந்தக் கலைக்குழுவால் பாதிக்கப்படும் ஓர் அரசியல்வாதிக்கும் இவர்களுக்குமான போராட்டம் என்கிற பாதையில் போகிறது.
நகைச்சுவை வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த முனீஷ்காந்துக்கு இந்தப்படத்தில் கதையின் நாயகனாகப் பதவி உயர்வு.அவரும் அதற்கேற்ப நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். ஒரு கலைஞனாக தானும் பெயர்பெற்று தன் குழுவையும் பாதுகாக்கும் அவருடைய பொறுப்பு நெகிழ்வு.
முனீஷ்காந்த் காதலிக்கிறார் என்றால் நன்றாக இருக்காது என்பதால் ஹரிகிருஷ்ணன், சுவாதிமுத்து ஆகிய இணையர் படத்தில் இருக்கிறார்கள்.அவர்களும் நன்று. ஹரிகிருஷ்ணனுக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
காளிவெங்கட்டுக்கும் முக்கிய கதாபாத்திரம். வழக்கம் போல அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
ஸ்ரீலேகா ராசேந்திரன், சூப்பர்குட் சுப்பிரமணி, ஆதங்குடி இளையராஜா மற்றும் வில்லனாக வரும் மைம்கோபி ஆகியோர் அவரவர் வேலையைச் சரியாகச் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
வினோத்காந்தியின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக அமைந்திருக்கிறது. கிராமியக் கலைகளுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் காட்சிகள் அமைந்திருக்கின்றன.
இக்கதைக்களம் இசையமைப்பாளருக்கும் இலட்டு சாப்பிடுவது போன்றது. அதை உணர்ந்து நல்ல பாடல்கள் மற்றும் பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹென்றி.
கிராமியக்கலைஞர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு அவர்களின் அவலங்களையும் பெருமைகளையும் பேசுபொருளாக்கியிருக்கும் இயக்குநர் ராஜாகுருசாமி, எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார். அதனால் சில குறைகளைத் தாண்டி இரசித்துப் பார்க்கும் படமாக அமைந்துள்ளது.
– குமார்